தோஷங்கள் போக்கி புண்ணியம் அருளும் சித்திரை திருவோண நடராஜர் அபிஷேகம்

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை.
தோஷங்கள் போக்கி புண்ணியம் அருளும் சித்திரை திருவோண நடராஜர் அபிஷேகம்
Published on

நாளை (சனிக்கிழமை) இறைவழிபாட்டுக்கு மிகவும் விஷேசமான நாள். சிவனுக்கு உகந்த நடராஜர் அபிஷேகம், பெருமாளுக்கு உகந்த திருவோணம், பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி ஆகிய மூன்றும் வருவது சிறப்புக்குரியது.

ஆனந்த மயமாக நடனம் ஆடிக்கொண்டிருப்பவர் ஸ்ரீநடராஜர். பிரபஞ்சத்தை இயக்கும் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தால்தான் இந்தப் பிரபஞ்சம் மற்றும் சகல ஜீவன்களும் தோன்றின என்கின்றன புராணங்கள்.

தேவர் கால கணக்கீட்டின்படி மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகக் கருதப்படுகிறது. அதன்படி மார்கழி திருவாதிரை வைகறை, மாசி சதுர்த்தசி காலை, சித்திரை திருவோணம் உச்சி காலம், ஆனி உத்திரம் மாலை (ஆனித் திருமஞ்சனம்), ஆவணி (சதுர்த்தசி) இரவு புரட்டாசி சதுர்த்தசி அர்த்தஜாமம் ஆக கருதப்படுகிறது.

ஆலயங்களில் 6 கால அபிஷேகம், பூஜை நடைபெறுவது போல தேவர்கள் ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கும் நடராஜப் பெருமானின் மனதை குளிர்விக்க 6 கால பொழுதுகளில் அபிஷேகம் செய்வார்கள்.

சித்திரை மாதத் திருவோணம், ஆனி மாத உத்திரம், மார்கழி மாதத் திருவாதிரை ஆகிய நட்சத்திர நாட்களிலும், ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியிலும் நடராஜருக்கு மகா அபிஷேகங்கள் நடைபெறும்.

பெரும்பாலான சிவாலயங்களில் இந்த 6 அபிஷேகங்களில், மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி உத்திரம் ஆகிய 2 அபிஷேக நாட்கள் பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற 4-ம் ஒரு நாள் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.

தேவர்களின் பகல்பொழுதான உத்திராயணத்தின் 4-ம் மாதம் சித்திரை. இந்த மாதம் தேவர்களின் உச்சிப்பொழுதாகும். இந்த மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் தேவர்கள் இறைவனுக்கு உச்சிகால பூஜை செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இதனை திருவோண அபிஷேகம் அல்லது வசந்த நீராட்டு என்று சொல்வர். அபிஷேகம் என்றால் மங்கள நீராட்டு. பெருமாள் கோவில்களில் சுவாமிக்கு மங்கள நீராட்டு செய்வதை “திருமஞ்சனம்” என்றும் சிவாலயங்களில் “அபிஷேகம்” என்றும் கூறுவது வழக்கம்.

நடராஜப் பெருமானின் தோற்றத் தலமான சிதம்பரத்தில் திருவோண சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அப்போது பால், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, தேன், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் குளிரக்குளிர நடராஜருக்கு அபிஷேகம் செய்வார்கள்.

இதைத் தொடர்ந்து அலங்காரம், சோடச உபசாரம், வேத பாராயணம், பஞ்ச புராணம் பாராயணம், மகாதீபாராதனை ஆகியனவும் நடைபெறும்.

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை. மிக வெப்பமான நட்சத்திரம் இது. சிவன் ஆலகாலம் உண்ட நீலகண்டன். சாம்பல் தரித்தவர். அக்னியை ஏந்திக் கொண்டிருப்பவர். வெப்ப ஆதிக்கத்துடன் இருப்பவர்.

எனவே சிவனுக்குக் குளிரக் குளிர அபிஷேகம் செய்யச் சொல்கின்றன ஆகமங்கள். இதனால்தான் சிவபெருமானை அபிஷேகப் பிரியன் என்கின்றனர்.

சாதாரணமாக குளியலுக்கு காரகன் நீர் ராசி அதிபதியான சந்திரன். ஆனால் திருமஞ்சனம் என்பது பலவித வாசனை பொருட்கள் மற்றும் குளிர்விக்கும் பொருட்களை கொண்டு செய்யப்படுவதால் திருமஞ்சனத்தின் காரகன் சுக்கிரன் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

சூரியன் சிவனின் அம்சமாகும். சூரியபகவான் சித்திரையில் உச்சமாகும்போது சந்திரனின் நட்சத்திர நாளில் நடராஜருக்கு அபிஷேகம் மிகவும் விசேஷமாகும். இந்த உச்சிக்கால பூஜையைக் காணத் தேவாதி தேவர்களும் சிதம்பரம் வருவார்கள் என்பது நம்பிக்கை.

நடராஜரின், இந்த உச்சிக்கால அபிஷேகத்தைக் கண்டால் பிறப்பில்லாப் பெருநிலையை எட்டலாம் என்பது ஐதீகம். மேலும், அனைத்துத் தோஷங்களும் விலகி இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும். திருவோண நட்சத்திரம் விஷ்ணு பகவானுக்கு உரிய உன்னதமான நட்சத்திரமாகும்.

இவரின் அருளைப் பெற ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில் விரதமிருந்து, துளசி மாலை சாத்தி பெருமாளையும் மகாலட்சுமியையும் வழிபட, சகல தோஷங்களும் நீங்கி, நிம்மதியான வாழ்வும், செல்வ வளமும், தடையற்ற மங்கல காரியங்களும் கைகூடும்.

இந்த நாளில் நடராஜருக்கும் அபிஷேகம் நடைபெறுவதால் சிவன், விஷ்ணு இருபெரும் தெய்வங்களின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்து வருவது மேலும் சிறப்புக்குரியது என்கின்றனர் ஆன்மீக பெரியவர்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com