என் மலர்
வழிபாடு

அதிகார தோரணையில் காட்சி தரும் பாலசுப்பிரமணியர்
- பிரம்மதேவர், “நான் தான் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மா" என்றார்.
- சுவாமிக்கு அருகில் இரண்டு யானை வாகனங்கள் உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இத்தல மூலவரான முருகப்பெருமான் காலையில் சிறுவனாகவும், உச்சிப் பொழுதில் இளைஞர் போலவும், மாலையில் முதியவர் போலவும், ஒரு நாளில் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றி பாடியுள்ளார்.
தல வரலாறு
ஒரு முறை கயிலாயத்துக்கு வந்த பிரம்மதேவர், சிறுவனாக இருந்த முருகப்பெருமானை கவனிக்காமல் சென்றார். அப்போது பிரம்மாவை அழைத்த முருகப்பெருமான், "நீங்கள் யார்?" எனக் கேட்டார். அதற்கு பிரம்மதேவர், "நான் தான் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மா" என்றார். பிரம்மதேவரின் அகந்தையை அழிக்க நினைத்த முருகப்பெருமான், படைக்கும் தொழிலுக்கு ஆதாரமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் கேட்டார். பிரம்மதேவர் பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழிக்க, முருகப்பெருமான் அவரை சிறை வைத்தார்.
பிரம்மதேவரிடம் கேள்வி கேட்டபோது, அதிகாரத் தோரணையில் இரு கரங்களையும் இடுப்பில் வைத்துக்கொண்டிருக்கும் தோற்றத்தில் முருகப்பெருமான் காட்சி தந்தார். அதே அமைப்பில் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
ஒரு சமயம் முருக பக்தர் ஒருவர் தல யாத்திரையாக இத்தலம் வந்தார். அவர் இங்கு தீர்த்த நீராட எண்ணி, இங்கிருந்த ஆண்டிகளிடம், "இங்கே நீராடும் இடம் எங்கே உள்ளது?" என்று கேட்டார்.
அதற்கு ஆண்டிகள், "அப்படி இந்த ஆலயத்தில் தீர்த்தம் எதுவும் கிடையாது" என்று பதிலளித்தனர்.
அப்போது அங்கு ஆண்டி கோலத்தில் சிறுவனாக வந்த முருகப்பெருமான், தீர்த்தம் இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்வதாகக் கூறி ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றார்.
பின்பு, குறிப்பிட்ட இடத்தில் தன்னிடம் இருந்த வேலால் குத்தினார், முருகப்பெருமான். உடனே, அந்த இடத்தில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடி குளமாக மாறியது. அதுவே இத்தலத்தில் 'வேலாயுத தீர்த்தம்' என்ற பெயரில் உள்ளது. அந்த பக்தர் ஆச்சரியத்தில் திகைத்தவாறே தீர்த்தத்தில் நீராடினார். பின்பு முருகப்பெருமான், பக்தருக்கு தன் சுயரூப காட்சியை கொடுத்து அருளினார். இவரே இத்தலத்தில் பாலசுப்பிரமணிய சுவாமியாக அருள்பாலிக்கிறார்.
முருகப்பெருமான், ஆண்டி கோலத்தில் சிறுவனாக வந்து காட்சி தந்த தலம் என்பதால், இத்தலம் ஆண்டியார்குப்பம்' என்று அழைக்கப்பட்டது. பின்பு அதுவே மருவி, 'ஆண்டார்குப்பம்' என்றானது.
கோவில் அமைப்பு
கோவிலில் மூலவரான முருகப் பெருமான், தன்னுடைய கரங்களில் வேல், வஜ்ரம், சக்தி என எந்தவித ஆயுதமும் இன்றி, இடுப்பில் கரங் களை வைத்தபடி காட்சி தருகிறார். இறைவன் அதிகார தோரணையில் இருப்பதால் 'அதிகார முருகன்' என்றும் அழைக்கப்படுகிறார். சுவாமிக்கு அருகில் இரண்டு யானை வாகனங்கள் உள்ளன.
மூலவர் சன்னிதிக்கு எதிரில் பிரம்மதேவர், நீள்வட்ட சிலை வடிவில் இருக்கிறார். அவருக்கு உருவம் இல்லை. பிரம்மாவுக்கு உரிய தாமரை, கமண்டலம், அட்சர மாலை போன்றவை மட்டும் காணப்படுகிறது. கோவில் முன்மண்டபத்தில் காசி விசுவ நாதர், விசாலாட்சி, நடராஜர் சன்னிதிகளும் உள்ளன. இங் குள்ள விநாயகர், 'வரசித்தி விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார்.
வழிபாடு
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், பொறுப்பான பதவிகள் கிடைக்கவும், அதிகாரம் உள்ள பதவியில் இருப்பவர்களின் பணி சிறக்கவும், புத்திசாலித்தனமான பிள்ளைகள் பிறக்கவும் வழிபாடு செய்கிறார்கள்.
தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், பக்தர்கள் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்தும், சந்தனக் காப்பு சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
திருமணமாகாதவர்கள் ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமியை தொடர்ச்சியாக 6 வாரம் வணங்கினால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
அமைவிடம்
திருவள்ளூரில் இருந்து சுமார் 33 கி.மீ. தொலைவிலும், சென்னை எழும்பூரில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும் ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.






