வேண்டும் வரம் அருளும் ஆனி பவுர்ணமி... விரதம் இருந்து வழிபடும் முறை

ஆனி பவுர்ணமி அன்று வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் நல்லது.
pournami
பவுர்ணமி
Published on

ஆனி மாதம்

தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான ஆன்மீகப் பெருமை உண்டு. ஆனால் சில மாதங்கள் மட்டும் தெய்வீக ஆற்றல் நிரம்பிய காலமாகக் கருதப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று ஆனி மாதம். சாஸ்திரங்களில் ஆனி மாதம் தேவர்களின் மாலைப் பொழுதாகக் குறிப்பிடப்படுகிறது.

தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதம் தான் ஆனி மாதம். சூரியன் சுக்கிரனின் வீடான ரிஷப ராசியில் இருந்து புதனின் ஆட்சி செய்யும் வீடான மிதுன ராசிக்கு சென்று ஒரு மாத காலம் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் தன்னுடைய பயணத்தை வடக்கு நோக்கி துவக்கும் சூரிய பகவான், ஆனி மாதத்தில் தான் நிறைவு செய்கிறார். தை முதல் ஆனி வரையிலான இந்த காலத்தையே உத்திராயண காலம் என்கின்றனர்.

மிதுன மாதம்

உத்திராயணப் புண்ணிய காலத்தின் இறுதி மாதமாகவும் ஆனி கருதப்படுகிறது. கோடையின் கடுமை படிப்படியாக குறைந்து, இயற்கை இதமான காற்றை வழங்கத் தொடங்கும் காலமும் இதுவே. தமிழ் மாதங்களில் நீண்ட பகல் நேரத்தைக் கொண்ட மாதமாகவும் ஆனி மாதம் குறிப்பிடப்படுகிறது. சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இந்த மாதம் “மிதுன மாதம்” என்றும் அழைக்கப்படுகிறது. வேத மரபுகளில் “ஜேஷ்ட மாதம்” என்ற பெயரும் பயன்படுகிறது.

பவுர்ணமி

ஆனி மாத பவுர்ணமி நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4:23 மணிக்குத் தொடங்கி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரை நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில் விரதம் இருப்பது மற்றும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது மிகுந்த ஆன்மீக பலன்களைத் தரும்.

ஆனி மாத பவுர்ணமியில் பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதமுறை மேற்கொள்ள வேண்டும். மாலையில் கோவில்களில் அல்லது வீட்டில் வழிபாடு மேற்கொண்டு உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். வழிபாட்டின்போது அம்மன் குறித்த பாடல்கள் பாராயணம் செய்தல் நன்று. ஆனி மாத பவுர்ணமியில் அம்பிகைக்கு கருப்பு வஸ்திரமும், முத்தாபரணமும் அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும். வெள்ளெருக்கம்பூ, செண்பகப்பூ இவற்றால் அர்ச்சனை செய்து முக்கனிகளையும், உளுத்தம் பருப்பு சாதத்தையும் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

வழிபாடு

ஆனி பவுர்ணமி வழிபாட்டின் மூலம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெறலாம். கண்ணனை நினைத்து விரதமிருக்க காதல் கைகூடும். விளக்கேற்றி வழிபட வேண்டுதல்கள் நிறைவேறும்.

விரதம்

ஆனி பவுர்ணமி அன்று சாவித்திரி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மாங்கல்ய பலம், ஐஸ்வரியம், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனி பவுர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் அரச யோகத்தினைப் பெற்றிருப்பர் என்கிறது ஜோதிட சாஸ்திரங்கள்.

பவுர்ணமி தினத்தில் எந்த தெய்வத்தை நினைத்து விரதமிருந்து வழிபட்டாலும் நாம் எதை நினைத்து வழிபடுகிறோமோ அது நிறைவேறும். ஆனி பவுர்ணமியில் மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் விசேஷமானது. முக்கனிகளை (மா, பலா, வாழை) நைவேத்தியமாகப் படைத்து, மனதார உங்கள் வேண்டுதல்களை மகாலட்சுமியிடம் தெரிவிக்கலாம். இது செல்வ வளம் பெருக உதவும். ஏலக்காய் மாலை அணிவித்து வழிபடுவதும் சிறந்தது.

ஆனி பவுர்ணமி அன்று வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் நல்லது. குலதெய்வ வழிபாட்டிற்குப் பிறகு, குங்குமம் அல்லது மஞ்சள் கொண்டு தெய்வ மந்திரங்களை 108 முறை சொல்லி அர்ச்சித்து வழிபாடு செய்யலாம். இது மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், தனலாபம், கல்வியில் மேன்மை போன்ற பலன்களைத் தரும்.

சத்யநாராயண பூஜை

இந்நாளில் சத்யநாராயண பூஜை செய்வதும் ஒரு சிறந்த பரிகாரமாகும். இந்த பூஜை செய்வதால் வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும், மேலும் 16 வகையான செல்வங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சத்யநாராயண பூஜை என்பது விஷ்ணுவின் ஒரு அம்சமான சத்யநாராயணரை வழிபடும் ஒரு சக்திவாய்ந்த பூஜை ஆகும். இது பொதுவாக பவுர்ணமி நாட்களில் அல்லது விரும்பிய காரியங்கள் நிறைவேறியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடத்தப்படுகிறது.

இந்தப் பூஜைக்கு முன்னதாக வீட்டைத் தூய்மைப்படுத்தி, வாழைக்கன்றுகள், மாவிலை தோரணம் மற்றும் சத்யநாராயணர் படம் அல்லது விக்ரகத்தை வைத்து அலங்கரிக்க வேண்டும். ஒரு கலசம் தயார் செய்து, சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரித்து வைக்க வேண்டும்.

ரவா, வாழைப்பழம், பால், சர்க்கரை, தேன், நெய் கலந்து தயாரிக்கப்படும் பிரசாதம் இந்தப் பூஜையின் முக்கிய நைவேத்தியமாகும். பூஜையை விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி, சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் “ஓம் ஸ்ரீ சத்யநாராயண தேவாய நமஹ” போன்ற மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யலாம்.

பூஜையின் மிக முக்கியமான பகுதி, சத்யநாராயணர் விரதக் கதைகளின் 5 அத்தியாயங்களைப் பக்தி சிரத்தையுடன் படிப்பதாகும். கதைகள் முடிந்ததும் நைவேத்தியம் படைத்து, கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்ட வேண்டும். கலச நீரை வீட்டில் தெளித்து, முடிந்தால் ஏழைகளுக்கு தான தர்மங்கள் செய்வது கூடுதல் பலனைத் தரும்.

முழு நிலவு தரிசனம் செய்த பின் பிரசாதங்களை உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். இந்தப் பூஜையைச் செய்வதன் மூலம் நம்முடைய நியாயமான வேண்டுதல்கள் நிறைவேறும், வாழ்வில் சுபீட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

சிவ பெருமான்

அதுமட்டுமல்லாமல் இந்த மாத பவுர்ணமி சிவனுக்கு உகந்த சோமவாரம் திங்கட்கிழமை வருவதால் சிவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து, பழங்களை நிவேதனம் வைத்து வழிபட பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். பிரிந்த வீடு கட்டும் பணிகள் சிறப்பாக நடைபெறும். வாழ்வில் சகல வளங்களும் பெறுவார்கள் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.

முருகப்பெருமான்

ஆனி மாத பவுர்ணமி அன்றும் விரதம் இருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்பவர்கள் தங்கள் வாழ்வில் இந்த எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள். இந்த நாளில் விரதம் இருந்து சிவன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்தால் எண்ணங்கள் ஈடேறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com