

இலங்கையில் நீர்க்குழம்பு சிறச்சாலையில் இன்று 2வது நாளாக மோதல் தொடர்ந்து வருகிறது. இதில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.
அப்போது, இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டடதை தொடர்ந்து, பெண் கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறைச்சாலைக்குள்ளேயே வன்முறை வெடித்தது.
மோதல் சம்பவம் குறித்து தகவல் வெளியானது அடுத்து, நீர்கொழும்பு உள்ளிட்ட பல காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அதிரடிப்படை அதிகாரிகள் உடனடியாக சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் சுமார் 1800 வரையான சநதேக நபர்கள் மற்றும் குற்றவாளிகள் என இரண்டு தரப்பு சிறைக் கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்துள்ளது.
சிறைச்சாலையில் இன்று கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கியை பயன்படுத்திய சத்தம் சிறைச்சாலையின் வெளியில் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோதலில் படுகாயம் ஏற்பட்டு சிறைக்கைதிகள் பலர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோதல் ஆரம்பித்த நேற்றைய தினத்தில், இரண்டு பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த மோதல் இன்றும் நீடிக்கும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.
சிறைச்சாலைக்குள் இருந்த காயமடைந்த நிலையிலும், மயக்கமடைந்த நிலையிலும் கைதிகள் மற்றும் அதிகாரிகளை பாதுகாப்பு பிரிவினர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் காட்சி வெளியானது.
மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் அதிகாரிகளும் அடங்குவர் என நீர்கொழும்பு மருத்துவமனையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.