

ஈரான் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விமானங்களுக்கு ஸ்பெயின் அரசு தனது வான்வெளியை மூடியுள்ளது.
‘ஈரான் போர் தொடர்பான நடவடிக்கைகளுக்காக அமெரிக்கப் போர் விமானங்கள் எங்கள் வான்வெளியைப் பயன்படுத்தவோ அல்லது ராணுவத் தளங்களைப் பயன்படுத்தவோ நாங்கள் அனுமதி வழங்கவில்லை’ என ஸ்பெயின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்கரிட்டா ரோபல்ஸ் தெரிவித்துள்ளார்.
ஒருதலைப்பட்சமாகவும், சர்வதேச சட்டத்திற்கு எதிராகவும் தொடங்கப்பட்ட ஒரு போரில் பங்கேற்கவோ அல்லது பங்களிக்கவோ கூடாது என்று அரசு ஏற்கனவே எடுத்த முடிவின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசர கால சூழ்நிலைகளில் மட்டும் இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெயின் வான்வெளியை மூடியதால், அமெரிக்கப் போர் விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஸ்பெயினைச் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இது அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கான செலவையும், பயண நேரத்தையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
ஸ்பெயினின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அந்நாட்டுடனான வர்த்தகத்தைத் துண்டித்துவிடுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான ஸ்பெயினின் இடதுசாரி அரசாங்கம் இந்த தடையை விதித்துள்ளது.