

பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதார செழிப்பை கொண்ட ஒரு இந்திய பெருங்கடலை இந்தியா நோக்கமாக கொண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுவானதாகவும், எதிர்காலத்திற்கு தயாரானதாகவும் மாற்றுவதற்கான வழிகள் குறித்து செஷல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் அவர் விவாதித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை:
அதிபர் ஹெர்மினியுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்திய மோடி, இந்திய பெருங்கடல் "நமது பொதுவான இல்லம். அதன் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவை நமது கூட்டு பொறுப்பு" என்றும் தாங்கள் ஒப்பு கொண்டதாக கூறினார்.
ஹெர்மினியுடனான தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய மோடி, "இந்திய பெருங்கடலை வாய்ப்புகளின் பெருங்கடலாக மாற்றுவதே நமது தொலைநோக்குப் பார்வை" என்றார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இந்தியாவுக்கும் செஷல்ஸுக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மையை அவர்கள் ஆய்வு செய்ததுடன், தொழில்கள், இணைப்பு, தொழில்நுட்பம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் பிற துறைகளில் உள்ள புதிய வாய்ப்புகள் குறித்தும் விவாதித்தனர்.
பிரதமர் உரை:
"இந்தியப் பெருங்கடல் நமது பொதுவான இல்லம் என்றும், அதன் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவை நமது கூட்டுப் பொறுப்பு என்றும் நாங்கள் நம்புகிறோம். இந்த உணர்வே நமது மகாசாகர் தொலைநோக்கு பார்வையின் அடித்தளமாக அமைகிறது.
நமது இரு நாடுகளின் தொழில்துறைகளுக்கான புதிய வாய்ப்புகளை நாங்கள் தொடர்ந்து ஆராய்வோம். இந்தியாவுக்கும் செஷல்ஸுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்துவதற்கும் நாங்கள் பணியாற்றுவோம்.
இது நமது இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்துடனான நமது உறவுகளையும் வலுப்படுத்தும்," என்று அவர் கூறினார்.