

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு உள்ள நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அடுத்தகட்ட அமைதி பேச்சுவார்த்தை நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதில் பங்கேற்க அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் ஒப்புக்கொண்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
பாகிஸ்தானில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஈரானின் பங்கேற்பை அதிபர் பெசஷ்கியான் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் அமைதி நடவடிக்கைக்காக பாகிஸ்தான் எடுத்து வரும் முயற்சிகளையும் பாராட்டினார்.
பாகிஸ்தான் மக்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இவ்வாறு கூறினார்.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ஈரான் அதிபர் இடையே 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்ததாக ஷெபாஸ் ஷெரீப் அலுவலகம் தெரிவித்து உள்ளது.