

இந்தோனேசியாவுக்கு அரசுமுறை பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது இரு நாடுகள் இடையே பாதுகாப்பு மற்றும் வர்த்தக துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தலைவர்களும் தலைநகர் ஜகார்டாவில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இரு நாடுகளுக்கிடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்களை பிரதமர் மோடி அறிவித்தார்.
அதன்படி, இந்தியாவின் சொந்த தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணைகளை இந்தநேசிய ராணுவத்துக்கு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியா - இந்தோனேசியா கடல்சார் பாதுகாப்பில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படும் வகையில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்தியாவின் டிஆர்டிஓ உருவாக்கிய வான் விட்டு வான் பாயும் அஸ்திரா ஏவுகணைகளையும் இந்தோனேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் இந்தோனேசியாவின் விண்வெளி துறையின் திறனை மேம்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உதவி செய்யும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இவற்றுக்கு மேலாக இந்தியாவின் பிரத்யேக டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையாக யுபிஐ முறையை, இந்தோனேசியாவின் பண பரிவர்த்தனைகள் அறிமுகப்படுத்துவதில் தான் மகிழ்ச்சி அடைவதாக மோடி தெரிவித்தார்.
இது வணிகங்களையும், பயணங்களையும் எளிமையாக்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து தொழில்நுட்பம், கனிமங்கள், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல், ரேர் எர்த் மேக்னட்ஸ் உள்ளிட்டவற்றில் இந்தியா-இந்தோனேசியா இடையே விநியோக சங்கிலியை வலுப்படுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு துறையில் பரிமாற்றம், பெரிடர் மேலாண்மை, தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவற்றிலும் ஒத்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதேநேரம் இந்தியாவின் உயர்தரமான மற்றும் மலிவு விலை மருந்துகள், இந்தோனேசிய குடிமக்களுக்கு எளிதில் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மறுபுறம், இந்தோனேசியாவின் உயரிய விருதான 'பிந்தாங் அடிபூர்ணா ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் இந்தோனேசியா' பதக்கம் பிரதமர் மோடிக்கு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ வழங்கினார்.
இந்தோனேசியா பயணத்தின் ஒரு பகுதியாக நாளை அதிபர் பிரபோவோவுடன் இணைந்து யோக்யகர்த்தாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற பிரம்பனன் இந்துக் கோவிலுக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார்.
இந்தோனேசியப் பயணத்தை முடித்து பின்னர், பிரதமர் மோடி அங்கிருந்து நேரடியாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.