72 பேரை பலி கொண்ட தீ விபத்து... சிக்கலில் 11 வயது சிறுவன்

தீயணைப்பு வீரர்களும் மீட்புக் குழுவினரும் அந்த தீயை கட்டுக்குள் கொண்டுவர ஒரு வாரம் ஆனது.
72 பேரை பலி கொண்ட தீ விபத்து... சிக்கலில் 11 வயது சிறுவன்
Published on

கடந்த ஜனவரியில் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்தது தொடர்பாக, காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 11 வயது சிறுவன் ஒருவன் குற்றவாளியாக இணைக்கப்பட்டதை அடுத்து, அவன் மீது வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.

கராச்சியின் புகழ்பெற்ற எம்.ஏ. ஜின்னா சாலையில் உள்ள வர்த்தக பகுதியான சத்தாரில் அமைந்துள்ள குல் பிளாசா வணிக வளாகத்தை ஜனவரி 17-ஆம் தேதியன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்து முற்றிலுமாக அழித்தது. தீயணைப்பு வீரர்களும் மீட்புக் குழுவினரும் தீயை கட்டுக்குள் கொண்டுவர ஒரு வாரம் ஆனது.

குற்றப்பத்திரிகை:

சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், அந்த சிறுவனும், அவனது தந்தையும், தீ விபத்து ஏற்பட்டதில் இருந்து தலைமறைவாக உள்ள மேலும் நான்கு பேரும் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அரசு தரப்பு சாட்சிகளின்படி, அந்த சிறுவன் தனது தந்தை இல்லாத நேரத்தில் வணிக வளாகத்தில் செயற்கை பூக்கடை ஒன்றை நடத்தி வந்தான் என்றும், தீக்குச்சிகளுடன் விளையாடி கொண்டிருந்தபோது தீயை மூட்டியதாகவும் கூறப்படுகிறது.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்களுடன் அந்த சிறுவனும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவான் என்று மாவட்ட அரசு வழக்கறிஞர் அப்துல் ரசாக் குஜ்ஜார் தெரிவித்தார்.

குற்றவாளிகள்:

மற்ற குற்றவாளிகளில் குல் பிளாசா நிர்வாக குழு உறுப்பினர்களான தன்வீர் பாஸ்தா, அமர் இஸ்மாயில், முகமது ரமலான் மற்றும் முகமது அமீன் ஆகியோர் அடங்குவர்.

விசாரணை அதிகாரி தனது குற்றப்பத்திரிகையில் 42 அரசு தரப்பு சாட்சிகளை பட்டியலிட்டுள்ளார். அதன்படி, அந்த தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்தனர், எட்டு பேர் காயமடைந்தனர் மற்றும் 1,153 கடைகள் எரிந்து நாசமாயின.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த நீதித்துறை ஆணையத்தின் அறிக்கை, பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று குஜ்ஜார் கூறினார்.

குற்றப்பத்திரிகையின்படி, அரசு தரப்பு சாட்சிகள் பலர் தங்களது வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில் ஒருவரான 13 வயது சிறுவன், குல் பிளாசாவில் உள்ள தனது நண்பனின் கடையில் இருந்தபோது, ​​தீக்குச்சிகளால் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் திடீரென கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.

X

Maalai Malar
www.maalaimalar.com