

தென் அமெரிக்க தீவு நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை மாலை சில நொடிகள் இடைவெளியில் 7.2, 7.5 என்ற ரிக்டர் அளவுகளில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
தலைநகர் காரகஸ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக சேதங்கள் பதிவாகி உள்ளன. நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1430 ஆக உயர்ந்துள்ளது. 3,360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பலர் மாயமாகி உள்ள நிலையில் உயிரிழப்பு மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. பலர் தங்கள் அனுபுக்குரியோரை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோ, தனது மனைவி யானினா மாரானெல்லா மற்றும் குழந்தைகள் ஆரோன், ஐன்ஹோவா ட்ரெஜோ ஆகியோரை நிலநடுக்கத்தில் பறிகொடுத்துள்ளார்.
வெனிசுலாவில் நிலநடுக்கத்தின்போது அவர்கள் இருந்த குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் அவர்கள் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முதலில் அவர்கள் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில் அவர்கள் உயிரிழந்ததை மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குடும்பத்தை இழந்து தவிக்கும் லூகாஸ் ட்ரெஜோவுக்கு அவர் விளையாடி வந்த வெனிசுலா கால்பந்து கிளப் 'டிபோர்ட்டிவோ லா குயைரா' இரங்கல் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது லூகாஸ் தனது அணியுடன் வேறொரு இடத்தில இருந்தார்.
எதிர்வரும் லீக் போட்டிக்காக அவர் தயார் ஆகி வந்த நிலையில் பிலாயா கிராண்டே பகுதியில் தங்கியிருந்த அவரது மனைவி, குழந்தைகள் நிலநடுக்கத்தில் உயிரிழந்துள்ளனர்.
பிலாயா கிராண்டே இந்த நிலநடுக்கத்தால் மோசமான சேதத்தை சந்தித்த பகுதிகளில் ஒன்று.
இதேபோல வென்சுலா கால்பந்து வீரர் ஹெக்டர் பெல்லோவின் மனைவி ஆண்ட்ரியா, தலைநகர் காரகஸில் தங்கள் 9 மாத பெண் குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழநதார்.
கட்டிடம் இடிந்து விழுந்தபோது குழந்தைக்கு அரணாக இருந்து அவளை ஆண்ட்ரியா தன் உயிரை கொடுத்து காப்பாற்றியுள்ளார். குழந்தை மீட்கப்பட்டு காரகஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.