ஸ்டாலினை கருப்பு துண்டு ஆபரேசன் மூலம் வைகோ பார்த்துக்கொள்வார்- வைகைசெல்வன்

வருகிற தேர்தலில் மு.க.ஸ்டாலினை கருப்பு துண்டு ஆபரேசன் மூலம் வைகோ பார்த்துக்கொள்வார் என்று மன்னார்குடியில் நடைபெற்ற விழாவில் வைகைசெல்வன் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசிய போது எடுத்த படம்.
பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசிய போது எடுத்த படம்.
Published on

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளையொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், தஞ்சை பரசுராமன் எம்.பி., அ.தி.மு.க. பேச்சாளர் பாளை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளருமான வைகைசெல்வன் பேசியதாவது:-

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் கமல் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என கூறுகிறார். அவரிடம் கூட்டணி வைக்க இங்கு யாரும் காத்திருக்கவில்லை.

டி.டி.வி.தினகரன், ஆர்.கே. நகர் மக்களுக்கு கொடுத்த ரூ.20 டோக்கனுக்கு பாக்கி வைத்துள்ளார். தினகரன் கட்சி என்பது பிராய்லர் கோழி போல. நன்றாக வளருமே தவிர, குஞ்சு பொரிக்காது.

ஆன்மிக அரசியல் என்று கூறி, தமிழக மக்களை ரஜினி குழப்பி வருகிறார். இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றி தினகரனுக்கு கிடைத்த வெற்றி இல்லை. ரூ.20 டோக்கனுக்கு கிடைத்த வெற்றி.

தினகரன் ஆரம்பிக்கும் புதிய கட்சிக்கு ‘ஸ்லீப்பர் செல் கழகம்’ ‘கரன்சி கழகம்’, என்று பெயரை வைத்து கொள்ளலாம். தினகரனிடம் இருப்பவர்கள் அதிருப்தியாளர்கள் தான்.

ரஜினி வாடகை பாக்கி வைத்துள்ளார். கமல், நடிகை கவுதமிக்கு சம்பள பாக்கி வைத்துள்ளார். தினகரனும் ஆர்.கே. நகர் மக்களுக்கு 20 ரூபாய் டோக்கன் பாக்கி வைத்துள்ளார். இதனால் பாக்கி வைத்துள்ளவர்களுக்கு எல்லாம் வருகிற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.


வருகிற தேர்தலில் நாம் மு.க.ஸ்டாலினை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. அவரை ‘கருப்பு துண்டு ஆபரேசன்’ மூலம் வைகோவே பார்த்துக் கொள்வார்.

இறந்த நாள் பற்றி மாற்றி, மாற்றி பேசிய சசிகலாவின் தம்பி திவாகரன், ஜெயலலிதாவின் மரணத்தை கொச்சைப்படுத்தி வருகிறார். தினகரன் வருங்கால முதல்வர் என்று திவாகரன் சொல்கிறார். தினகரன் டூடோரியல் கல்லூரிக்கு வேண்டுமானால் முதல்வர் ஆகலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com