இடதுசாரி கட்சிகளை கேட்க துணிவில்லை... விசிகமீது மட்டும் அவதூறு ஏன்? - திமுகவிற்கு திருமாவளவன் கேள்வி

வி.சி.க.வும், திருமாவளவனும் எந்த அளவிற்கு நேர்மையாக இருந்தார்கள் என ஸ்டாலின் மனசாட்சிக்கு தெரியும்.
இடதுசாரி கட்சிகளை கேட்க துணிவில்லை... விசிகமீது மட்டும் அவதூறு ஏன்? - திமுகவிற்கு திருமாவளவன் கேள்வி
Published on

தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்ற நிலையில், திமுக மற்றும் விசிக தொண்டர்களிடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக நேற்று முன்தினம் சில இடங்களில் இருதரப்பினர் இடையே மோதலும் ஏற்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தனது தொண்டர்களிடையே பேசியுள்ளார்.

முகநூலில் தனது தொண்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கி அவர் பேசியதாவது:-

“நடந்து முடிந்த தேர்தல் முடிவு அதிர்ச்சி அளித்தது. ஜனாதிபதி ஆட்சி அமைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்தோம். தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தை ஆகிய மதச்சார்பற்ற, நாம் அரசியல் நெருக்கடியை உணர்ந்த நிலையில் ஆதரவு கொடுத்து இருக்கின்றோம்.

இதனை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதனை நாம் எதிர் கொள்ளவேண்டும். வருத்தப்படுவதற்கோ, ஆத்திரப்படுவதற்கோ இதில் எதுவும் இல்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்தோம்.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைந்து விடக்கூடாது, தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்ற கூடாது என்ற நோக்கத்தில் பிரச்சாரம் செய்தோம் , எதிர்த்து களமாடினோம். இதனால் பா.ஜ.க.வின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்.

ஆனால் த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற நிலையில் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது. ஆ. ராசா, த.வெ.க.விற்கு ஆதரவளித்ததற்கு விமர்சனம் செய்துள்ளார். அதை பொருட்படுத்த வேண்டாம். கடந்து செல்லுங்கள்.

காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் எடுத்த அதே நிலைப்பாட்டைத்தான் நாமும் எடுத்தோம். த.வெ.க.வுக்கு ஆதரவளிப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் சொல்லிவிட்டுதான் வந்தேன்.

அவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்க முடியவில்லை. ஆனாலும் முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் அமைச்சரவையில் இடம் பெறுகிறோம் என்பதை சொல்லிவிட்டு வந்தேன்.

தோழமைக் கட்சி என்ற உணர்வுடன் தி.மு.க.வுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்தோம். உற்ற துணையாக இருந்து செயல்பட்டோம். எங்களால் முடிந்த நிலையில் கூட்டணியில் பாதிப்பு இல்லாத வகையில் ஒருங்கிணைத்தோம் என்பதை மு.க.ஸ்டாலின் நன்கு அறிவார். அவரை சுற்றி இருக்கும் ஒரு சிலரும் நன்கு அறிவார்கள்.

அதையும் தாண்டி நாம் எடுத்த முடிவை ஆ.ராசா உள்பட பலர் விமர்சனம் செய்கிறார்கள் என்பது சற்று வலியாகத்தான் இருக்கிறது. என்றாலும் கூட அவர்கள் ஆதங்கப்படுவதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்பதை உட்கொள்ள வேண்டும். ராசாவை எதிர்த்து விமர்சனம் செய்யக்கூடாது. போராட்டம் நடத்துவது தேவையற்றது. எனவே தொண்டர்கள் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும்.

மறு கட்டமைப்பு பணிகளுக்கு தயாராக வேண்டும். ஜூலை 23-ந் தேதி நடைபெறும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு லட்சக்கணக்கானவர்களை திரட்ட வேண்டும். காங்கிரஸ் செய்த துரோகத்தை விட வி.சி.க. செய்த துரோகம் பெரிது என்று நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள். தேர்தலுக்குப் பிறகு ஆதவ் அர்ஜுனாவுடன் திட்டமிட்டு சதி செய்ததாக கூறுகிறார்கள்.

இது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மனசாட்சிக்கு தெரியும். வி.சி.க.வும், திருமாவளவனும் எந்த அளவிற்கு நேர்மையாக உறவு கொண்டிருந்தோம், நட்பு கொண்டிருந்தோம் என்பது அவரது மனசாட்சிக்கு தெரியும். வேறு யாருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com