

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் அதிமுக எம்.பி. இன்பதுரை இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
“90 சதவீத அதிமுகவினர் வந்துவிடுவார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்கிறார். தவெகவின் வெற்றி என்பது ஒரு மாயாஜால வெற்றி. அக்கட்சி முழுமையாக 8 மாவட்டங்களில் வெற்றிபெறவில்லை.
கிட்டத்தட்ட 48 தொகுதிகளில் 3வது இடம். தற்போது அதிமுகவிலிருந்து ஆள் பிடிக்கும் வேலையைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். பிள்ளைப்பிடிப்பவர்களாக மாறியுள்ளனர். அவர்களுக்கு போதிய எண்ணிக்கையில்லை. அவர்களுக்கு பலமில்லாததால், திமுக கூட்டணியிலிருந்து ஆள் தூக்கியிருக்கின்றனர்.
திமுகவும், அதற்கு துணை நிற்பவர்களும் தீயசக்தி எனக்கூறி ஆட்சிக்கு வந்தனர். இதையேத்தான் அதிமுகவும் சொன்னது. தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்றது, அதிமுக 47 இடங்களை பெற்றது. அப்போது ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாதபோது, தவெக யாரை அழைத்திருக்க வேண்டும்? அதிமுகவைத்தானே அழைத்திருக்க வேண்டும். தீயசக்தியை வீழ்த்துவதுதானே இருதரப்பினரின் நோக்கம்.
ஆனால் தவெக திமுக கூட்டணி கட்சிகளை அழைத்துவந்து ஒரு ஆட்சியை அமைக்கிறது. அப்போது அவர்களின் நோக்கம் எம்.ஜி.ஆரின் மரபை அழிப்பது. ஆனால் எம்.ஜி.ஆர் உடைய புகழை ஒருபோதும் தமிழ்நாட்டிலிருந்து அகற்றமுடியாது. அதிமுகவை அழிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சிதான் தவெக என தேர்தலுக்கு முன்னரே நான் கூறியிருந்தேன். அதனைத்தான் அவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
தவெகவில் போதிய எண்ணிக்கை இல்லாததால், அதிமுகவின் பட்டியிலிருந்து ஏன் ஆடுகளைத் திருடுகிறீர்கள் என ஆதவ் அர்ஜுனாவை கேட்கிறேன்” என தெரிவித்தார்.