

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க ஏப்.16ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசி வீடியோ வெளியிட்டுள்ள அவர்,
"தமிழ்நாட்டின் வாசல் வரை வந்துவிட்ட பேராபத்து பற்றி சொல்லவும், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும்தான் இந்த விடியோ.
தேர்தல் பிரசாரத்துக்காக நிற்காமல், ஓடிக்கிட்டே இருந்தாலும், இந்தக் கடமை தவிர்க்க முடியாதது. நாளை மறுநாள் ஏப். 16 ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது.
கூடுகிறது என்று சொல்வதைவிட தமிழ்நாடு, மேற்கு வங்க பேரவைத் தேர்தலுக்கு நடுவில் வலுக்கட்டாயமாகக் கூட்டப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். தொகுதி மறுவரையறை என்கிற சட்டத்திருந்தத்தை இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப் போகிறார்கள். முதலில் இருந்தே இதுதொடர்பாக நாம் தொடர்ந்து எச்சரித்தோம்.
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பாதிப்படையக் கூடிய மாநிலங்களின் முதலமைச்சர்களையும், முக்கியக் கட்சிகளின் தலைவர்களையும் சென்னை அழைத்து கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடத்தினோம்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துங்கள், அளவாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், குடும்பக் கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள் என்று மத்திய அரசு கூறியதையெல்லாம் நாங்கள் கேட்டோம். சொன்னதை செய்ததால் எங்களுக்கு தண்டனை தருவீர்களா?
தென் மாநிலங்கள் எல்லாம் பாதிப்படையாது என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உத்தரவாதம் தர வேண்டும் கேட்டிருந்தோம். ஆனால், அதற்கு எந்த பதிலும் இல்லை. இதற்காக பல்வேறு கட்சி எம்.பி.க்கள் நேரில் சந்திந்து முறையிட நேரம் கேட்டிருந்தோம். அதுவும் கிடைக்கவில்லை.
இப்படி நாம் சொன்ன எதையும் அவர்கள் காதில் வாங்காமல், திமுகவோடு மட்டுமல்ல; எந்தக் கட்சியோடும், எந்த மாநிலத்தோடும் கலந்து ஆலோசனை நடத்தாமல், அவர்கள் இஷ்டத்திற்கு செய்யப் பார்க்கிறார்கள்.
நேற்று மரியாதைக்குரிய சோனியா காந்தியும், நாம் கேட்டிருந்த அதே கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சிகளுக்கும் பதில் இல்லை. இப்படி அவசர அவசரமாக தொகுதி மறுவரையறை செய்ய நினைப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல்.
இன்னும் சொல்லப் போனால், மாநில உரிமைகளை மத்திய அரசு படுகொலை செய்திருக்கிறது. இந்தத் தொகுதி மறுவரையறை எப்படி செய்யப் போகிறார்கள் என்பது பற்றி தெரியவில்லை. அந்த சட்டத் திருத்தம் என்ன என்பது பற்றி எந்த இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இவர்கள் இப்படி மறைத்து மறைத்து செய்வதால், இதன்பின்னால் எதோ பெரிய ஆபத்து இருக்கிறது என்ற சந்தேகம் அனைவரின் மனதிலுமே வலுவடைகிறது.
தென் மாநில மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். நான் மத்திய பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் இந்த நேரத்தில் முக்கியமான ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
வருகிற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் இருந்து எங்கள் எம்.பி.க்கள் கலந்துகொள்வார்கள். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டைப் பாதிக்கின்ற மாதிரியோ, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்குகின்ற மாதிரியோ எதாவது நடந்தால், தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் இருக்கும் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.
தமிழ்நாடு தனது எதிர்ப்பை கடுமையாகக் காட்டும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம். முதலமைச்சராக இருக்கும் என்னுடைய தலைமையிலேயே மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.
இது தேர்தல் காலம், அவர்களின் கவனம் அதில்தான் இருக்கும், நாம் டெல்லியில் அமைதியாக தமிழ்நாட்டிற்கான தொகுதி மறுவரையறையை செய்திடலாம் என்று மட்டும் நினைக்கவே நினைக்காதீர்கள்.
இதை சொல்லும் நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மட்டுமல்ல. திராவிட முன்னேற்ற கழகம் எனும் பேரியக்கத்தின் தலைவர். நீங்கள் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டை பார்க்க வேண்டியிருக்கும். 50, 60களில் இருந்த திமுகவை இந்தியா மீண்டும் பார்க்கவேண்டியிருக்கும்.
இவர் என்ன மிரட்டுகிறார் என பார்க்காதீர்கள். எச்சரிக்கிறேன். இதை மிரட்டல் என நினைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பும் எச்சரிக்கை இது. தேர்தல், ஆட்சி, அதிகாரம் இதெல்லாம் எங்களுக்கு இரண்டாம் பட்சம்தான்.
நாங்கள் சுயமரியாதைக்காரர்கள், எங்களுக்கு கொள்கைதான் முக்கியம். மாநில உரிமைகள்தான் முக்கியம். அதைத்தான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் எங்களுக்கு விட்டுச் சென்ற உயிர்க்கொள்கை.
தமிழ்நாட்டிற்கு தவறிழைத்துவிட்டு வழக்கம்போல கடந்துபோக நினைத்தால் நடப்பதே வேறு. சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளான இன்று அவர்மேல் ஆணையாக கூறுகிறேன். தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் இந்தியாவையே திரும்பி பார்க்கவைப்போம். பிரதமருக்கு மீண்டும் சொல்லிக் கொள்கிறேன், இது தமிழ்நாட்டிலிருந்து உங்களுக்கு விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை.
தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்!” என தெரிவித்தார்.