

சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
“ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. அவரை இவர்கள்தான் பொதுச்செயலாளராக ஆக்கினர். அவர்மீது குறை, குற்றம் இருந்தால் பேசிதீர்க்க வேண்டுமேதவிர, ஆளுங்கட்சியில் சேர்வது அழகல்ல.
இவர்களுக்காக இபிஎஸ் இடம் பேச தயாராக இருக்கிறேன். அதிமுகவை அழிக்க நினைக்கும், தவெகவில் இணைந்தவர்களின் பெயர்கள் வரும் காலங்களில் கருப்பு எழுத்துக்களால் எழுதப்படும்.
திமுகவால் நிர்பந்திக்கப்பட்டிருந்தால் அன்றே வெளியேறி இருக்கலாமே. தேர்தலில் தனித்து போட்டி இட்டிருக்காலம் அல்லது புறக்கணித்திருக்கலாம். இப்போது திமுகவைப் பற்றி பேசுவது முதுகில் குத்துவதற்கு சமம். வைகோ பேசுவது அனைத்தும் தவறு.
சட்டமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே குதிரை பேரும் நடந்துள்ளது என்று நான் கூறினேன். எங்கள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் இடம் திருட்டுத்தனமாக ஆதரவு பெற்றதாக அப்போது நான் கூறுகிறேன். அன்று அமமுகவிடம் தொடங்கியதுதான் இன்று தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதுதொடர்பாக நாங்கள் தொடர்ந்த வழக்கில் குதிரை பேரத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யைத்தான் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்.
திமுக கூட்டணியின் இரவல் ஆதரவில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் வெளியேறினால் ஆட்சி முடிந்துவிடும். இன்று திமுகவை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. கூட்டணி கட்சிகள் வெற்றிப்பெற திமுக தொண்டர்கள் உழைத்தார்கள்.
தமிழக வெற்றி கழகம் ஒன்றும் தூய சக்தி கிடையாது. அது ஒரு நாச சக்தி. தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து எப்படி பல்டி அடிக்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
விஜய்க்கு வாக்களித்த 35 சதவீத மக்கள் கண்டிப்பாக, நாம் தவறான முடிவை எடுத்துவிட்டோம் என உணர்வார்கள். திமுக, அதிமுகவிற்கு மாற்று என்ற பெயரில் நாம் ஏமார்ந்துவிட்டோம் என்பதை உணர்வார்கள்.
ஊழல் வழக்கு உள்ள முன்னாள் அமைச்சர்களை கட்சியில் சேர்த்து எப்படி அவர்கள் தூய சக்தி என்று சொல்வார்கள். தொடமாட்டோம், தொட்டால் விடமாட்டோம் எனப் பேசினார். விடமாட்டோம் என்பது என்னோடு சேர்க்காமல் விடமாட்டோம் என்பதுதான்.
பழைய ஆட்சியாளர்களை மிஞ்சியதாக இவர்களின் ஆட்சி உள்ளது. மாத்திரையை பொடியாக்கினேன் என்று அமைச்சர் கூறியதைப் பார்த்தால், விஜய்யெல்லாம் தோர்த்துவிடுவார் போல. 50 ஆண்டு காலம் அரசியல் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினை பார்த்து அரசியலை விட்டு விலக வேண்டும் என சின்னப் பையன் நிர்மல் குமார் பேசுகிறார்.
அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான். அது போல தான் தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் எவ்வளவு பேசட்டுமோ பேசட்டும்.” என்றார்.