

தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அடைய இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளன. இதனால் ஆட்சி அமைக்க காங்கிரஸிடம் ஆதரவு கோரி வருகிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு விஜய் கடிதம் எழுதியுள்ள நிலையில், கோரிக்கை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியிடம் தேசியத் தலைமை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிம் பேசிய அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்,
“தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைக்க ஆதரவு கோரி எங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் இந்தத் தேர்தல் தீர்ப்பு மதச்சார்பற்ற அரசுக்கும், அரசியலமைப்பை அதன் உண்மையான உணர்வோடு பாதுகாப்பதற்கும் வழங்கப்பட்ட ஒன்று என்பதில் காங்கிரஸ் தெளிவாக உள்ளது.
பாஜகவோ அல்லது அவர்களின் மறைமுகப் பிரதிநிதிகளோ எந்த விதத்திலும் தமிழ்நாடு அரசை இயக்குவதை அனுமதிக்கக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு மக்களின் தேர்தல் மனநிலையைக் கருத்தில் கொண்டு, விஜய்யின் கோரிக்கை குறித்து இறுதி முடிவெடுக்குமாறு மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.” என தெரிவித்தார்.