

தஞ்சை மத்திய மாவட்ட அயலக அணியின் தலைவர் முத்தமிழ்ச்செல்வன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் நிலவும் தற்போதைய தவெக அரசின் அவலங்களையும், அடக்குமுறைகளையும் கடுமையாகச் சாடிப் பேசினார்.
விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மணமக்கள் வழக்கறிஞர்கள் மலரவன் மற்றும் காவியா ஆகியோரது திருமணத்தை நடத்தி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திருமணம் கழகக் குடும்பங்களுக்கே உரிய பாணியில் ஒரு சிறப்பான சுயமரியாதைத் திருமணமாக இங்கே நடந்து முடிந்திருக்கிறது.
இந்தத் தொகுதி முழுக்கக் கருப்பு-சிவப்புக் கொடிகள் பறப்பதைப் பார்க்கும்போது, இது திருமண விழாவா அல்லது கழகத்தின் மாநாடா என்று வியக்கும் வகையில் மக்கள் திரண்டுள்ளனர். ஆட்சிக்கு வந்த கடந்த ஒரு மாத காலத்திலேயே இந்த ‘சோபா மாடல்’ ஆட்சியின் போலி பிம்பம் முற்றிலும் அடித்துத் துவைக்கப்பட்டு, நொருங்கிக் கிடக்கிறது.
இந்த அரசு செய்யும் தவறுகளையும், சறுக்கல்களையும் இன்றைய இளைஞர்கள் தட்டிக்கேட்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், அவ்வாறு நியாயமாகக் கேள்வி எழுப்பும் இளைஞர்களையும், நமது கழகத் தோழர்களையும் இந்த அரசு கைது செய்து அச்சுறுத்தப் பார்க்கிறது. "தூய சக்தி" என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த ஐந்தாவது நிமிடமே குதிரை பேரத்தைத்தான் ஆரம்பித்தார்கள்.
பிற கட்சிகளுக்குப் பின்னால் முதலமைச்சர் ஓடுவதும், அவர்களுக்குப் பயந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதத்துடன் வரிசையில் நிற்பதும் தான் கடந்த ஒரு மாத காலமாகத் தமிழகத்தில் 'ரிப்பீட் மோடில்' செய்தியாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இன்று தமிழகத்தில் எங்குப் பார்த்தாலும் மின்வெட்டுதான் பிரதானப் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக இந்த ஒரத்தநாடு பகுதியில் நள்ளிரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், கடந்த 2021 முதல் 2025 வரை நமது திமுக ஆட்சியில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் தடையின்றித் திறந்து விடப்பட்டது. ஆனால், இந்தத் தவெக அரசு இன்னும் மேட்டூர் அணையைத் திறக்கவில்லை. குருவை சாகுபடிக்கு அவர்கள் அறிவித்த சிறப்புத் தொகுப்பு போதுமானதாக இல்லை என விவசாயிகள் சாலைகளில் இறங்கிப் போராடி வருகிறார்கள்.
இதைச் சட்டமன்றத்தில் நாம் சுட்டிக்காட்டினால், "திமுக தூண்டுதலால் தான் விவசாயிகள் போராடுகிறார்கள்" என முதலமைச்சர் விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார். தேர்தல் நேரத்தில் 5 ஏக்கர் வரை பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது சிறு விவசாயி, குறு விவசாயி எனத் தரம் பிரித்து ஏமாற்றியுள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் வீட்டில் கடன் வாங்கியிருந்தால் தள்ளுபடி கிடையாது எனப் புதிய நிபந்தனைகளைப் போட்டு விவசாயிகளை வஞ்சிக்கிறார்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களுக்குத் தாங்கள் 'ஸ்டிக்கர்' ஒட்டிக்கொள்ளும் இந்த அரசு, ஏதேனும் தவறு நடந்தால் அதற்குத் 'திமுக தான் காரணம்' என்று ரெடிமேட் பதிலைச் சொல்கிறது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இன்று அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இதைப்பற்றிச் சட்டமன்றத்தில் நாங்கள் கேள்வி எழுப்பினால் முதலமைச்சரிடம் முறையான பதில் எதுவும் இல்லை. ஆளுங்கட்சியினர் சட்டமன்றத்தில் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்தால், அது சட்டமன்றமா? இல்லை சினிமா தியேட்டரா அல்லது ஏதாவது சூட்டிங் ஸ்பாட்டா? என்று கேட்கும் அளவிற்குச் சட்டமன்றத்தின் தரத்தையே குறைத்துவிட்டார்கள்.
எங்கள் தலைவரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். எங்கள் தலைவர் என்றும் தேடப்படும் இடத்தில் இருந்ததில்லை. மிசா காலகட்டத்திலேயே அஞ்சாமல் சிறை சென்றவர் அவர். இன்று மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் தமிழக மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களிலும் எங்கள் தலைவர் எங்கும் நிறைந்திருக்கிறார்.
ஆனால், தற்போதைய முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான பெரம்பூர் தொகுதி மக்களோ, "தெரியாமல் இவரை ஜெயிக்க வைத்துவிட்டோமே, தொகுதிப் பக்கமே ஆளைக் காணவில்லையே" என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஒட்டுமொத்த தமிழகமும் மின்சாரத்தையும், கடந்த ஐந்து ஆண்டுகால நல்ல சட்டம் ஒழுங்கையும் தேடிக்கொண்டிருக்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் இன்று சந்தித்து வரும் இந்த அவல நிலையிலிருந்து மாநிலத்தை மீட்க வேண்டிய பொறுப்பு திமுக உடன்பிறப்புகளாகிய நமக்கு உண்டு. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. எனவே, அனைவரும் வருங்காலத்தில் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்.
மணமக்கள் இருவரும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து, அதேநேரத்தில் தங்களின் சுயமரியாதையை எங்கும் விட்டுக்கொடுக்காமல் வாழ வேண்டும். தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயரைச் சூட்ட வேண்டும் என வாழ்த்தி விடைபெற்றார்.