

தமிழகத்தின் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது முதல் உரையை ஆற்றினார். அவர் தனது உரையில் பேசியதாவது:-
17-வது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எனது முதல் உரை இது. இவ்வேளையில் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த 1.54 கோடி தமிழ்நாடு மக்களுக்கு நன்றி. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள இருவருக்கும் வாழ்த்துகள்.
தமிழ்நாடு சட்டசபையில் எதிரிக்கட்சியாக இல்லாமல், ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நிச்சயம் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படும். நாங்கள் என்றைக்கும் ஒரு ஆக்க சக்தி தான். முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் இல்லத்திற்கும் அரசியல் கட்சி தலைவர்கள் இல்லத்திற்கும் சென்று வாழ்த்துகள் பெற்றுள்ளார். அந்த அரசியல் நாகரீகம் சட்டப்பேரவையில் தொடர வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம் எதிர்பார்ப்பு.
முதலமைச்சர் விஜய்யும் நானும் ஒரே காலேஜில் படித்தவர்கள். ஆனால் அரசை நடத்துவதில் திமுகதான் சீனியர். அந்த அடிப்படையில் எங்களுடைய அறிவையும், அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள நாங்கள் (திமுக) தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள நீங்களும் (தவெக அரசு) தயாராக இருங்கள். ஏனென்றால் நமக்கு எப்போதுமே தமிழ்நாட்டு மக்களின் நலனே முக்கியம்.
சபாநாயகர் அவர்கள் எங்கள் இருதரப்பையும் கைகளை பிடித்து அரவணைத்து செல்ல வேண்டும். அவைத் தலைவரை கோபப்படுத்தும் வகையில் நாங்கள் செயல்பட மாட்டோம். சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி காதுகளாகவும், எதிர்க்கட்சிகள் குரலாகவும் இருக்க வேண்டும். அதில்தான் இந்த அவையின் பெருமை உள்ளது. அளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இல்லாமல் மாநில வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒரே வரிசையில் இருக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு இணையாக எதிர்க்கட்சி வரிசை அமைந்துள்ளது.
அரசின் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் ‘வந்தே மாதரம்’ முதலில் ஒலிக்கிறது. ஆனால், இங்கு தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளியது ஏன்? முன்பு ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது, இதேபோன்ற முயற்சியை தடுத்து நிறுத்திய வரலாறு எங்களுக்கு உண்டு. இனிவரும் காலங்களில், குறிப்பாக ஆளுநர் உரை நிகழ்த்தும்போது, இதுபோன்று மரபுகள் மீறப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தின் உரிமையையும், மரபையும் காக்க நாங்கள் என்றும் உறுதியாக இருப்போம்.
“வெல்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு! மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.