TN Assembly Election| பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியை வீட்டுக்கு அனுப்புவோம்- உதயநிதி ஸ்டாலின்

மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரமாக உயர்த்தி தருவோம்.
TN Assembly Election| பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியை வீட்டுக்கு அனுப்புவோம்- உதயநிதி ஸ்டாலின்
Published on

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மதுரைக்கு வந்தாலே எப்போவுமே தனி எனர்ஜி தான், தனி கெத்துதான். அவ்வளவு பாசக்கார பயலுக நீங்கள். பொதுவாக மதுரை மக்களை பற்றி பேசும் போது உங்களிடம் பாசம் அதிகமாக இருக்கும்.

அதிகமாக இருந்தாலும் அதில் எந்தவித போலித்தனமும் இருக்காது. எல்லாம் உண்மையான பாசமும், அன்பும் கொண்டவர்கள் மதுரை மக்கள். அதனால் வரும் தேர்தலில் உங்கள் உண்மையான பாசத்தினை தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களிடம் காட்டுங்கள். நியாயமான கோபத்தினை அ.தி.மு.க. மீது காட்டுங்கள்.

மதுரை எம்ய்ஸ் மருத்துவமனைக்கு 2015-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினர். ஆனால் 11 ஆண்டுகளாகியும் இதுவரை கட்டி முடிக்கவில்லை. 2021-ல் தேர்தல் பிரசாரத்தின் போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 4 செங்கல் மட்டும் வைத்திருந்தார்கள். அப்போது அந்த செங்கலை காட்டி பிரசாரம் செய்தேன். அன்றிலிருந்து தற்போது 5 வருடங்களாகியும் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டி முடிக்கவில்லை. ஆனால் திராவிட மாடல் அரசு 10 மாதத்திலேயே கலைஞர் நூலகத்தை பிரமாண்டமாக கட்டி முடித்து முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஒன்றிய பா.ஜ.க. அரசு இஞ்ச் இஞ்சாக செதுக்கி வருகின்றனர். தமிழ்நாடு என்றாலே பா.ஜ.க. அரசுக்கு அலட்சியம்தான். அப்படிப்பட்ட பா.ஜ.க.வுடன் தான் இன்று எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்து உள்ளார். மோடி, அமித்ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி முரட்டு அடிமையாக உள்ளார்.

இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்று பார்த்துவிடுவோம். கடந்த தேர்தலில் சொன்னதை நிறைவேற்றியுள்ளோம். மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரமாக உயர்த்தி தருவோம்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் தான் உள்ளது. தி.மு.க. தொண்டர்கள் ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து சங்கி கூட்டங்களை பற்றி சொல்லுங்கள். அவ்வாறு செய்தால் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறலாம். சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைய செய்து பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியை வீட்டிற்கு அனுப்புவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com