

சென்னை:
த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லசமுத்திரத்தில் த.வெ.க. நிர்வாகி நடத்தி வரும் பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான சோதனை நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ஒரு இடத்தில் கணக்கில் காட்டப்படாத பணமோ, பொருட்களோ பதுக்கி வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால், பறக்கும் படையினர் வருமான வரித்துறையினருக்கு தகவல் அனுப்பி விட்டு, அந்த இடத்திற்கு விரைந்து சென்று, அந்த இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும்.
அந்த இடத்திற்குள் நுழைந்து சோதனை செய்ய பறக்கும் படையினருக்கு அதிகாரம் இல்லை. முறையான வாரண்ட் உடன் வருமான வரித்துறையினர் தலைமையில் தான் சோதனை நடத்தப்பட வேண்டும். ஆனால் மல்லசமுத்திரம் பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் வேளாண் உதவி அதிகாரி வெற்றிவேல் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான சோதனை நடத்தியுள்ளனர்; சோதனைக்குப் பிறகு அங்கு எந்த ஒரு பணமோ, பொருளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி சான்றிதழ் அளித்து சென்று இருக்கிறார்கள்.
இவ்வாறு சோதனை நடத்தவோ, சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கடிதம் கொடுக்கவோ தேர்தல் பறக்கும் படையினருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.
தி.மு.க-வினர் தொடர்ந்து தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட அழுத்தம் கொடுப்பதும், சில அதிகாரிகள் அந்த அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவதும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் சூழலை உருவாக்காது. இத்தகைய அதிகாரிகளை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.