

சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்க உள்ளது.
இதையடுத்து தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய அணியும் களம் காண்கின்றன.
இவர்களுக்கு போட்டியாக விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் களத்தில் குதித்து உள்ளது. மற்றொரு புறம் நாம் தமிழர் கட்சி சார்பில் தலைவர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கி உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் முதன்முறையாக களம் காண்கிறது. கட்சி தொடங்கப்பட்ட பின்னர் மாநாடுகள், மக்கள் சந்திப்பு கூட்டங்கள் மூலம் கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு சென்ற விஜய் தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயார் ஆனார்.
தேர்தலில் த.வெ.கவுக்கும் தி.மு.கவுக்கும் இடையில்தான் போட்டி எனக் கூறிவந்த விஜய் அ.தி.மு.க. கூட்டணியையும் கடுமையாக எதிர்த்து வருகிறார். 2 கூட்டணிகளையும் எதிர்கொள்ளும் வகையில் பலமான போட்டியை உருவாக்க திட்டமிட்டு அதற்கான பணிகளும் மும்முரமாக நடக்கின்றன.
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் த.வெ.க. பலமான வேட்பாளர்களை களத்தில் இறக்க உள்ளது.
இந்த நிலையில் நேற்று பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் தமிழகம் முழுவதும் போட்டியிட விரும்பி த.வெ.க.வினர் கொடுத்த மனுக்களை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து முதல் கட்டமாக 114 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை நேரில் வரச் செய்து வேட்பு மனு மற்றும் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து அதில் ஏதும் பிழை இருந்தால் அவை சரி செய்யப்பட்டது.
இந்த பணியில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு வக்கீல், ஒரு ஐ.டி.விங் நிர்வாகி லேப் டாப் சகிதமாக அமர்ந்து ஆய்வு செய்தார்கள்.
பின்னர் தேனாம்பேட்டையில் உள்ள த.வெ.க. வார் ரூமில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில் கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இரவு முதல் விடிய விடிய இந்த ஆலோசனை நடைபெற்றது.
தொடர்ந்து வேட்பாளர்கள் விவரம் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஓரிரு நாளில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளனர்.
வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணிகள் ஓரளவு முடிவுற்ற நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதில் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த கட்டமாக பிரசாரத்தை தொடங்க ஆயத்தமாகி வருகிறார். விஜய் தன்னுடைய பிரசாரத்தை பெரம்பூரில் இருந்து தொடங்க உள்ளார். நாளை (புதன்கிழமை) அவர் பெரம்பூரில் பிரசாரம் செய்ய இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இதற்கான போலீஸ் அனுமதி மற்றும் முன் ஏற்பாட்டு பணிகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
கொடுங்கையூர் கிருஷ்ண மூர்த்தி நகர் ஜவகர் தெருவில் 3200 சதுர அடியில் த.வெ.க. பெரம்பூர் சட்டமன்ற அலுவலகம் அமைக்கும் பணிகள் நடந்தது. முழுவதும் ஏ.சி. வசதியுடன் இந்த தேர்தல் அலுவலகம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
கார் பார்க்கிங் வசதியுடன் உள்ள இந்த அலுவலகத்தை அவரது ரசிகர்கள் சிலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 2 நாட்கள் பெரம்பூரில் முகாமிட்டு பிரசாரத்தை மேற்கொள்ள இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகளை நேரில் அழைத்து அவர்களுடன் உரையாட இருக்கிறார்.
பெரம்பூரில் விஜய் பிரசாரத்தை தொடங்க இருப்பதால் த.வெ.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதனிடையே தேர்தலில் போட்டியிடுவதற்கும், பிரசாரத்தை தொடங்குவதற்கும் விஜய் பெரம்பூரை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளி யாகி உள்ளன. விஜய் த.வெ.க. கட்சியை ஆரம்பித்த பிறகு, உறுப்பினர் சேர்க்கைக்கான பணி ஆன்லைனில் தொடங்கப்பட்டது. அதில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 45 ஆயிரம் பேர் இணைந்தது பெரம்பூர் தொகுதியில் தான். பெரம்பூர் தொகுதியில் விஜய் ரசிகர்கள் அதிகம் என்பதால், அந்த தொகு தியை விஜய் தேர்வு செய்து உள்ளார்.
இதனால், வழக்கமான ஒரு தொகுதியாக இருந்த பெரம்பூர், தற்போது வி.ஐ.பி. ஸ்டார் தொகுதியாக மாறி உள்ளது. திரைப்பயணத்தின் உச்சத்தில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் பிரசாரத்தை தொடங்குவதால் பெரம்பூரில் இப்போதே அரசியல் நிலவரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.