

திருப்பத்தூர்:
திருப்பத்தூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
போக்குவரத்து துறைக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் உள்ளது. மின் துறைக்கும் கடன் உள்ளது. கல்வித் தரம் உயர்த்தப்படவில்லை.
மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. சாலைகள் சரிவர அமைக்கப்படவில்லை. உள்ளூர் உற்பத்திகளை ஆதரிக்காமல், வெளி ஊர்களில் இருந்து வாங்கி விற்பனை செய்கிறார்கள். இதற்கு மேலாக கட்டண உயர்வு, சொத்து வரி போன்றவற்றை உயர்த்தி பொதுமக்களுக்கு சுமை சேர்த்துள்ளனர்.
இப்படிப்பட்ட அரசை மாற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
தமிழகத்தில் ஆளும் கட்சிகள் தேர்தலின்போது பணம் வழங்கி வாக்குகளை பெற முயலுகின்றன. "இலவசம்" என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் என்ற நடைமுறை இருக்காது. ஆனால், பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் அனைவருக்கும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாங்கள் நிறுத்தும் வேட்பாளர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் நடுத்தர நிலையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மக்கள் நலனுக்காக பணியாற்றுவார்கள். மக்களுக்கு உண்மையாக நல்லது செய்யக் கூடியவர்களையே முன்னிறுத்துகிறோம்.
நாட்டு மக்களுக்கு எது சரியான திட்டம் என்பதை அவர்கள் உணர்ந்தால், இந்த அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி மட்டுமே இருக்கும். அவர்கள் தங்களை திராவிடர்கள் என்று கூறுகிறார்கள்.
நாங்கள் தமிழர்கள் என்று கூறுகிறோம். அவர்கள் இருமொழிக் கொள்கையை ஆதரிக்கிறார்கள். நாங்கள் ஒரே மொழி தமிழ் என்ற கொள்கையை முன் வைக்கிறோம். பணத்திற்கு வாக்கு வாங்கும் அரசியல் நிலவி வருகிறது.
மாண்புமிக்க ஜனநாயகம் இன்று பணநாயகமாக மாறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.