

சென்னை:
தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார், யார் என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது. தி.மு.க.வில் தற்போது அமைச்சர்களாக இருப்பவர்கள், மாவட்ட செயலாளர்கள், பெண்கள் மற்றும் புதுமுகங்கள் என கலவையாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுவதும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வெற்றி வாய்ப்புள்ள நபர்கள் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படலாம் என்று தி.மு.க. நிர்வாகிகளும் கூறி இருக்கிறார்கள்.
தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட சில தொகுதிகளை தி.மு.க.வும், தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை காங்கிரசும் கேட்டு இருந்தது. இதுதொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு இருக்கின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க., தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் ஆகியவையும் விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். பா.ம.க. போட்டியிடும் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் தயாராகி விட்டதாகவே தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதே போன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரனும் தங்கள் கட்சி சார்பில் 11 தொகுதிகளில் போட்டியிடுவோரின் விவரங்களையும் விரைவில் வெளியிட இருக்கிறார்.