பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
Published on

கோவை:

கேரள மாநிலத்தில் வருகிற 9-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி முதல்-மந்திரி பினராயி விஜயன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) மற்றும் காங்கிரஸ், பாரதிய ஜனதா தலைவர்கள் அந்த மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் கேரளத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பாலக்காடு மற்றும் திருச்சூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் 2 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார்.

பின்னர் இங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு சென்று பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து திருச்சூரில் பிரசாரம், ரோடுஷோ மேற்கொள்கிறார். அதன்பின்னர் கொச்சியில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர் மோடியின் கோவை வருகை காரணமாக கோவை மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீஸ் கமிஷனர் கண்ணன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரதமர் மோடி வருகையை ஒட்டி விமான நிலைய பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நீலாம்பூர், சிந்தாமணிபுதூர், செட்டிப்பாளையம், மதுக்கரை, எட்டிமடை, வாளையாறு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மற்றும் அவினாசி சாலை, பீளமேடு, சிட்ரா, நேரு நகர், சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், காளப்பட்டி பகுதிகள், கொச்சி-பாலக்காடு சாலை, போத்தனூர், சுந்தராபுரம், ஈச்சனாரி பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீதோஷ்ண நிலை காரணமாக ஹெலிகாப்டரில் செல்ல முடியாவிட்டால் பிரதமர் மோடி காரில் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதன்காரணமாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதியில் இன்று மாலை 5 மணி வரை டிரோன்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com