திமுக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகள் இன்று வெளியாகிறது

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.
திமுக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகள் இன்று வெளியாகிறது
Published on

சென்னை:

சட்டமன்ற தேர்தலில் ஆளும்கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் -28, தே.மு.தி.க.-10. விடு தலை சிறுத்தைகள்-8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-5, இந்திய கம்யூனிஸ்டு-5. ம.தி.மு.க.- 4,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 2, மனிதநேய மக்கள் கட்சி-2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-2 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அதனடிப்படையில் இந்த 3 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த 3 கட்சிகளுக்கும் நேற்று முறைப்படி தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது.

கூட்டணிக்கு ஏற்கனவே ஆதரவை தெரிவித்திருந்த முத்தரையர் சமூகத்தை சேர்ந்த கே.கே.செல்வகுமார் தலைமையிலான தமிழர் தேசம் கட்சிக்கு ஒரு தொகுதி நேற்று ஒதுக்கப்பட்டது. இந்த 4 கட்சிகளும் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டி என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

கூட்டணி கட்சிகளுக்கு 70 இடங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தி.மு.க. 164 இடங்களில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ம.தி.மு.க. 3 இடங்கள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 இடங்களில் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் 175 தொகுதிகளில் 'உதயசூரியன்' சின்னம் களம் காண்கிறது.

ஏற்கனவே தொகுதி பங்கீடு முடிவடைந்த கட்சிகளிடம் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை தி.மு.க. குழு பெற்றிருந்தது. அதனடிப்படையில் எந்தெந்த கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து தி.மு.க. குழு முதலில் ஆலோசனை மேற்கொண்டது. அதன்பின்னர், கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டு குழுவினரை சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று முன்தினம் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

2-வது கட்டமாக நேற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்தந்த கட்சி தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பட்டியலில் கையெழுத்திட்டனர்.

தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சந்தித்து பேசினார். ஆனால் தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் இறுதியாகவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் இறுதி செய்யப்படவில்லை.

இந்த கட்சிகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) உடன்பாடு எட்டப்பட்டு கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிக்க உள்ளார்.

தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியல் 27-ந்தேதி (அதாவது, இன்று) வெளியிடப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதே போன்று ம.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என்று வைகோவும் அறிவித்துள்ளார்.

அதே போன்று தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலும் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com