

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் தவெக-காங்கிரஸ் கூட்டணி வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல்களிலும் தொடரும் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸிற்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என தவெக உறுதியளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸிற்கு இந்த முடிவு தொடர்பாக திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,
“ஆரம்பத்திலிருந்தே, காங்கிஸில் இருந்த சிலர் விஜய்க்கு ஆதரவளிக்கவும், அவரது கட்சியில் இணையவும் விரும்புவதாகப் பேச்சுகள் இருந்தன. காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் இதைத்தான் செய்து வருகிறது, இறுதியில் அவர்கள் அனைத்திலும் தோற்றுப் போகிறார்கள்.
டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் அவர்கள் துடைத்து எறியப்பட்டுவிட்டனர். மகாராஷ்டிராவில் அவர்களுக்கு வாய்ப்பே இல்லை. தங்கள் கட்சியை தாங்களே மூடும் ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அடைய காங்கிரஸின் ஆதரவைப் பெற்றுள்ளது.