தி.மு.க Vs அ.தி.மு.க: 1952 முதல் 2021 வரை - தமிழக தேர்தல் வெற்றி, தோல்விகள் முழு புள்ளிவிவரம்!

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாக கூறி திமுக ஆட்சி இரண்டே ஆண்டுகளில் கவிழ்ப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக 176 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.
தி.மு.க Vs அ.தி.மு.க: 1952 முதல் 2021 வரை - தமிழக தேர்தல் வெற்றி, தோல்விகள் முழு புள்ளிவிவரம்!
Published on

ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு. யாருக்கு வாக்கு செலுத்தலாம் என மக்கள் இப்போதே வீடுகளிலும், வேலையிடங்களிலும் குறிப்பாக டீ கடைகளிலும் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.

5 ஆண்டுகள் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் நிறை குறைகளை பற்றி ஒரு சாரார் பேச ஒரு சாரார் புதுவரவு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளை விவாதித்து வருகின்றனர். விஜய் வருகையால் இந்தாண்டு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது என்னவோ உண்மைதான்.

தற்போது களத்தில் திமுகவின் மெகா (28 கட்சிகள்) கூட்டணி, அதிமுக - பாஜக - அமமுக - அன்புமணி பமகவின் என்டிஏ கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் என 4 பேர் கட்சிகள் பிரதான போட்டியாளர்களாக உள்ளனர்.

தற்சமயம் கட்சித் தலைவர்களின் காரசார பிரசாரங்களே தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளம் வருகின்றன.

இந்த சூழலில் தமிழ்நாட்டின் முந்தைய, அதவாது 1952 முதல் நடைபெற்ற தேர்தல்கள் குறித்த புள்ளிவிவரங்களை மக்கள் அறிந்து கொள்வது அவசியம். தேர்தல் நடைபெற்ற ஆண்டு, வெற்றி பெற்ற கட்சி, வென்ற இடங்கள், பெற்ற வாக்கு சதவீதம் ஆகியவற்றின் விரிவான தொகுப்பு தொகுப்பு கீழ்வருமாறு.

1952 - இந்தத் தேர்தலில், மொத்தம் இருந்த 367 தொகுதிகளில் போட்டியிட்டு, 152 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. 1949இல் திமுக உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

1957 - மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் நடந்த இந்த தேர்தலில் 204 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களில் வெற்றிபெற்று, காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. தி.மு.க. 124 தொகுதிகளில் போட்டியிட்டு 15 தொகுதிகளை கைப்பற்றி சட்டமன்றத்துக்குள் முதல்முறையாக நுழைந்தது. இந்த தேர்தலில் முதல்முறையாக களம் கண்ட திமுக சுமார் 14% வாக்குகளை பெற்றிருந்தது.

1962 - 206 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 139 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் 143 இடங்களில் போட்டியிட்டு 50 இடங்களைக் கைப்பற்றி சட்டமன்றத்தில் எதிர்கட்சியானது திமுக. இந்த தேர்தலில் தி.மு.க பெற்ற வாக்கு சதவிகிதம் 27.10% ஆக இருந்தது.

1967 - இந்தத் தேர்தலில், போட்டியிட்ட 174 தொகுதிகளில் 137 இடங்களை (கூட்டணியை தவிர்த்து) கைப்பற்றியது திமுக. இதன்மூலம் முதல் முறையாக திமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது. அண்ணாதுரை முதலமைச்சர் ஆனார். கருணாநிதி பொதுப் பணித்துறை அமைச்சரானார். இந்த தேர்தலில் செயின்ட் தாமஸ் மவுன்ட் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார் எம்ஜிஆர். இந்த தேர்தலில் திமுக பெற்ற வாக்கு சதவீதம் 40.69%.

1971 - அண்ணாவின் மறைவுக்கு பின் நடந்த இந்த தேர்தலில் திமுக, 203 தொகுதிகளில் போட்டியிட்டு 184 தொகுதிகளைக் கைப்பற்றியது. கருணாநிதி முதல்வர் பொறுப்பேற்றார். இந்த தேர்தலில் திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் - 48.58%.

1972 - கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த எம்ஜிஆர், அதிமுகவை உருவாக்கினார்.

1977 - எம்ஜிஆர் தலைமையில் முதல் முறையாக தேர்தலை சந்தித்த அதிமுக 200 இடங்களில் போட்டியிட்டு 130 ஐ கைப்பற்றி ஆட்சி அமைத்தது. எம்ஜிஆர் முதல்வர் பொறுப்பேற்றார். திமுக போட்டியிட்ட 230 தொகுதிகளில் 48 இடங்களில் மட்டுமே வென்றது. இந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் 30.36% ஆகவும், திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 24.89% ஆகவும் இருந்தது.

1980 - எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக 177 இடங்களில் போட்டியிட்டு 129 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. எம்ஜிஆர் மீண்டும் முதல்வரானார். இந்த தேர்தலில் திமுக 112 தொகுதிகளில் 37ல் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் வாக்கு சதவீதம் 22.10% மட்டுமே. அதேநேரம் அதிமுக பெற்ற வாக்கு சதவீதம் 38.75%

1984 - அதிமுக 155 இடங்களில் போட்டியிட்டு 132 இடங்களைக் கைப்பற்றியது மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. 167 இடங்களில் போட்டியிட்டு 24 இடங்களில் மட்டுமே திமுக வெற்றி கண்டது. இத்தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் 29.34% ஆகவும், அதிமுகவின் வாக்கு சதவீதம் 37.03% ஆகவும் இருந்தது. எம்ஜிஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது இந்த தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

1987இல் 70 வயதில் எம்ஜிஆர் மறைவுக்கு பின் மீதிருந்த ஆட்சிக்காலத்துக்கு அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வராக இருந்தார். இதன்பின் அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணியாக பிளவுபட்டது.

1989 - எம்ஜிஆர் மறைவுக்கு பின் நடந்த இந்த தேர்தலில் போட்டியிட்ட 202 தொகுதிகளில் 150 தொகுதிகளை கைப்பற்றி திமுக, 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்சி அமைத்தது. சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா அணி 27 இடங்களைக் கைப்பற்றியது. இரட்டைப் புறா சின்னத்தில் போட்டியிட்ட ஜானகி அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக பெற்ற வாக்கு சதவீதம் 33.18% ஆகவும், ஜெயலலிதா அணி வாக்கு சதவீதம் 21.15% ஆகவும், ஜானகி அணியின் வாக்கு சதவீதம் 9.19% ஆகவும் இருந்தது.

1991 - ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாக கூறி திமுக ஆட்சி இரண்டே ஆண்டுகளில் கவிழ்ப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக 176 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் அதிமுக வெற்றிபெற, முதல்முறையாக தமிழக முதல்வர் ஆனார் ஜெயலலிதா. இத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் வாக்கு சதவீதம் 44.39% ஆகிவும் திமுக பெற்ற வாக்கு சதவீதம் 22.46% ஆகவும் இருந்தது.

1996 - திமுக போட்டியிட்ட 182 தொகுதிகளில் 173 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற மீண்டும் முதல்வரானார் கருணாநிதி. 68 இடங்களில் போட்டியிட்ட அதிமுக நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. இதில் திமுகவின் வாக்கு சதவீதம் 42.07%, அதிமுக வாக்கு சதவிகிதம் 21.47% என்ற அளவிலும் இருந்தது.

2001 - காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளை உள்ளடக்கிய அதிமுகவின் மெகா கூட்டணி 141 தொகுதிகளில் போட்டியிட்டு 132 இடங்களைக் கைப்பற்றியது. திமுக - பாஜக கூட்டணி போட்டியிட்ட 183 தொகுதிகளில் 31 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக 31.44% வாக்குகளும், திமுக 30.92% வாக்குகளும் பெற்றிருந்தது.

2006 - சென்ற தேர்தலில் அதிமுக பக்கம் இருந்த காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணிக்கு தாவ, 132 தொகுதிகளில் போட்டியிட்டு 96 இடங்களில் வென்று மீண்டும் கருணாநிதி முதல்வர் ஆனார். ஆனால் 188 தொகுதிகளில் போட்டியிட்டபோதும் 61 இடங்களில் மட்டுமே அதிமுக வென்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக 26.46% வாக்குகளும், தோல்வியடைந்த திமுக 32.64% வாக்குகளும் பெற்றிருந்தன.

2011 - 168 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 150 இடங்களில் வெற்றி பெற ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வரானார். திமுக 124 இடங்களில் களம் கண்டு 23 இடங்களை மட்டுமே கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்த்தையும் பறிகொடுத்தது. விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்தது. இந்த தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் 38.40%, அதிமுகவின் வாக்கு சதவீதம் 22.39% ஆகும்.

2016 - 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 135 இடங்களில் வெற்றி காண மீண்டும் ஜெயலலிதாவே ஆட்சி அமைத்தார். 180 இடங்களில் களம் கண்டு 88 இடங்களோடு மட்டுப்பட்டது திமுக. ஆனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை மீட்டெடுத்துக்கொண்டது. இதில் அதிமுகவின் வாக்கு சதவீதம் 40.77%, திமுகவின் வாக்கு சதவீதம் 31.64% ஆகும்.

அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணிக்க, 2017 பிப்ரவரியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.

2018 ஆகஸ்டில் கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுகவுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையேற்றார்.

2021- இந்த தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு 133 இடங்களை கைப்பற்றியது. முதல் முறையாக ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்றார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட எடப்பாடி தலைமையிலான அதிமுக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக 37.7 % சதவீத வாக்குகளும், அதிமுக - 33.29 சதவீத வாக்குகளும் பெற்றது.

ஒட்டுமொத்தமாக கருணாநிதி 5 முறையும், ஜெயலலிதா 6 முறையும் தமிழக முதல்வராக இருந்துள்ளனர். ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி நடப்பு தேர்தலில் இரண்டாவது முறை முதல்வர் நாற்காலியை கைப்பற்ற மும்முரமாக செயல்பட விஜய்யின் வரவும் கவனம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com