த.வெ.க.வுக்கு திக் திக்: முடிவில் இழுபறி.. ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆலோசனை

முதலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற 2 இடங்களை கொண்ட ஐயுஎம்எல் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது.
த.வெ.க.வுக்கு திக் திக்: முடிவில் இழுபறி.. ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆலோசனை
Published on

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றியது.

ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளைப் பெற மற்றக் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிவந்தது.

இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்று 5 இடங்கள் வென்ற காங்கிரஸ் நேற்று முன்தினம் ஆதரவு தெரிவித்தது.

இந்நிலையில், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிகளிடமும் இன்று ஆதரவு தெரிவித்தன.

விஜய் இன்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

முதலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற 2 இடங்களை கொண்ட ஐயுஎம்எல் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது.

ஆனால் ஐயுஎம்எல் அந்த செய்திகளை மறுத்து, தவெகவுக்கு ஆதரவு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தது.

மேலும் விசிக ஆதரவு தருவதாக வாய்வழியாக கூறப்பட்டாலும் கடிதம் நாளை தான் வழங்கப்படுகிறது.

2 இடங்கள் கொண்ட விசிக நாளை ஆதரவு கடிதம் வழங்கும் வரை விஜய் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை.

தவெகவுக்கு இன்னும் 1 இடம் தேவைப்படுவதால் அதுவரை அவர் பதவியேற்பு இழுபறியே என்று கூறப்படுகிறது.

விசிக ஆதரவு கடிதம் நாளை ஆளுநர் மாளிகைக்கு செல்வது பொறுத்தே முடிவு உள்ளது. மறுபுறம் நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

கம்யூனிஸ்டுகள் முடிவை பின்பற்றுவேன் என்று முன்னர் பேட்டியளித்திருந்த நிலையில் தற்போது திருமாவளவன் இறுதி முடிவெடுக்காமல் மௌனம் காத்து வருவதும் தற்போது ஸ்டாலினுடனான சந்திப்பும் பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீனும் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com