

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முற்றிலும் மாறுபட்ட விதமாக , முன் எப்போதும் இல்லாத வகையில், தற்போது 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும் அரசியல் கட்சியினர் கூட்டணி கட்சிகள் தேர்வு, அவர்களுக்கான தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வந்தனர்.
ஆளும் கட்சியான தி.மு.க. மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் 26 கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் தங்களுக்கான தொகுதிகளை அடையாளம் கண்டதுடன், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.
அதே போல், முக்கிய எதிர்கக்கட்சியான அ.தி.மு.க.வும் பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. அந்த கட்சியும் நேற்று தனது இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை வௌியிட்டுள்ளது.
இந்த தேர்தலில் புதிய வரவாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 234 தொகுதிகளில் களமிறங்குகிறது.
இதனிடையே, ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்கு வங்கி சதவீதத்தை அதிகரித்தபடி, நாம் தமிழர் கட்சி தமிழக அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் யாருடனும் கூட்டணி இன்றி தனித்து போட்டி என்ற தனது நிலைப்பாட்டுடன் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். சிவகங்கை சீமானின் சொந்த மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட துரை மாணிக்கம் என்பவர் 23,872 வாக்குகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
இன்று தேவகோட்டை ராம்நகர் பகுதியில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில், தேவகோட்டை துணை ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வாட்ஸிடம் சீமான் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அவருடன் தாயார் அன்னம்மாள், அவரது மனைவி கயல்விழி மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.
இந்நிலையில் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
* மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் வாங்க வேண்டும் என உங்களிடம் கூப்பன் கேட்டது யார்?
* தமிழ்நாட்டில் குடிக்கும் மக்களின் வாக்கு எனக்கு வேண்டாம். குடிமக்களின் வாக்குகள் எனக்கு வேண்டும்.
* நான் பிச்சை எடுத்து கட்சி நடத்துவதாக என்னை கிண்டல் செய்கிறவர்கள் மக்களை இலவசத்திற்காக கையேந்த வைப்பது சரியா?
* நான் திரள் நிதி வாங்குகிறேன், தி.மு.க. திருட்டு நிதி வைத்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.