

தமிழ்நாட்டில் வருகிற 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தல் தேதி நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் 2 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். ராகுல் காந்தி நாளையும், 20-ந்தேதியும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மேடை ஏறாத ராகுல் காந்தி நாங்குநேரி தொகுதியில் அவருடன் பிரசாரம் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக பிரசாரம் செய்ய நேரம் இல்லை.
* ராகுல் காந்தி ஒரு பக்கம் பிரசாரம் செய்கிறார். முதலமைச்சர் ஒரு பக்கம் பிரசாரம் செய்கிறார்.
* ஏற்கனவே பயணம் திட்டம் மேற்கொண்டதால் ராகுல் காந்தியுடன் பிரசாரம் செய்ய முதலமைச்சருக்கு நேரம் இல்லை.
* காங்கிரசுக்காக நாங்கள் ஓட்டு கேட்கிறோம். எங்களுக்காக காங்கிரசார் வாக்கு கேட்கிறார்கள். எல்லாம் ஒன்று தான்.
இவ்வாறு அவர் கூறினார்.