என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும் - சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
    X

    தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும் - சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

    • தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் வாழக்கூடிய எளிய மக்கள் மற்றும் விவசாயிகள்தான்.
    • சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 74 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உடலுழைப்பைத் தந்து பயன்பெற்று வந்தனர்.

    சென்னை:

    சட்டசபையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தினை முன்மொழிந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

    தமிழ்நாட்டில், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டமாக இருந்தாலும், நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருந்தாலும், அனைத்து திட்டங்களும் இது மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம் என்ற பாகுபாடு இல்லாமல் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் பல முன்னோடித் திட்டங்களில் இந்திய அளவில், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முதன்மையாக இருப்பதோடு, பல்வேறு ஒன்றிய அமைச்சகங்களின் பாராட்டுகளையும் தொடர்ந்து பெற்று வருகின்றது. இருப்பினும், ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது என்பதை நாம் தொடர்ச்சியாகக் கண்டு வருகிறோம்.

    எந்தவொரு ஒன்றிய அரசின் திட்டமானாலும், பணி முன்னேற்றத்திற்கேற்ப நிதி விடுவிப்பதை செய்யாமல் உடனடியாக நிதி விடுவிப்பதை வேண்டுமென்றே தவிர்த்து, காலதாமதத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், 2025-2026-ம் ஆண்டில் தொழிலாளர் மதிப்பீடு மற்றும் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டு உள்ளது. எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1,026 கோடி ஊதியத்திற்கான தொகையும், ரூ.1,087 கோடி பொருட்கூறுக்கான தொகையும் இன்றுவரை விடுவிக்கப்படாமலேயே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர்த் திட்டத்திலும் இதுவரை ரூ.3,112 கோடி நிதி விடுவிக்கப்படாமல் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. பிரதம மந்திரி கிராமச் சாலை திட்டத்தில் ரூ.516 கோடி இன்னும் நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது.

    இப்படி இவர்கள் தாமதிப்பதால் பாதிக்கப்படுவது யார்? தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் வாழக்கூடிய எளிய மக்கள் மற்றும் விவசாயிகள்தான். நம் மாநிலத் தின் மீது ஏன் இந்த ஓரவஞ்சனை என்றுதான் நாம் கேட்கிறோம். இந்த வஞ்சனையை எல்லாம் விஞ்சக்கூடிய அளவிற்கு, தற்போது ஒன்றிய அரசு, கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு வேரறுக்கக்கூடிய வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை மாற்றி, அதற்குப் பதிலாக "வளர்ச்சியடைந்த இந்தியா ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்" என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, ஊரகப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலையை உறுதி செய்தும், சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 74 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உடலுழைப்பைத் தந்து பயன்பெற்று வந்தனர். இதில் 85 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் திட்டத்தை, அறிமுக நிலையிலேயே நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாகக் குரல் எழுப்பி இருக்கிறது. எனினும் மக்கள் குரலை மதிக்காத ஒன்றிய அரசு, அந்தத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. இந்தப் புதிய திட்டமானது, மக்களின் தேவையின் அடிப்படையிலே அமைக்கப்படவில்லை. இதுகுறித்து நான் ஏற்கனவே பிரதமருக்கு கடந்த 18.12.2025 அன்று கடிதம் எழுதி இருக்கிறேன்.

    இந்த புதிய வளர்ச்சியடைந்த இந்தியா ஊரக வேலை உறுதி மற்றும் வாழ் வாதார திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்கான உரிமை என்ற அடிப்படையில் இல்லாமல், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட உள்ள உத்தேச ஒதுக்கீட்டின்படி வேலை வழங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே இப்பேரவையில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டு நான் முன்மொழிகிறேன்.

    "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், 2005-ன்படி, கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டுமென்றும், மக்களின் வேலைக்கான தேவைக்கேற்பவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மாநில செயல்திறன் அடிப்படையிலும் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும்;

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பெரும்பான்மையாக பலனடைந்து வந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்பட, சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்திட முந்தைய ஆண்டு களின் ஒதுக்கீட்டிற்குக் குறையாமல் ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும்;

    உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் எனவுள்ள தற்போதைய புதிய நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பின்பற்றப்பட்ட வேலைக்கான தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யும் நடைமுறையைத் தொடர வேண்டுமென்றும், மேலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டினை, வேலைக்கான தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசே வகுத்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென்றும்;

    இப்புதிய திட்டத்தில் மாநில அரசின் நிதிப்பங்களிப்பு 40 சதவீதமாக உயர்த்தப்படுகையில் மாநில அரசின் நிதிச்சுமையை கணிசமாக அதிகரிப்பதாக உள்ளது. எனவே, புதிய திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினைப் போலவே திருத்தி அமைக்கப்பட வேண்டுமென்றும்;

    தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கி, பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டு இத்திட்டத்திற்கு 'வளர்ச்சியடைந்த இந்தியா-ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம்-ஊரகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி இந்த தேசத்திற்கு வகுத்துத் தந்த கொள்கைகளையும், வழிகாட்டிய பாதையையும் எப்போதும் நினைவுகூரும் வகையில் இத்திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டுமென்றும் ஒன்றிய அரசை இப்பேரவை ஒரு மனதாக வலியுறுத்துகிறது."

    இந்திய நாட்டின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005-ன் விதிமுறைகளின்படியே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் மேற்படி தீர்மானத்தை இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றித் தர வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களையும் கேட்டு அமைகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். அதன் பிறகு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

    Next Story
    ×