Sarathkumar | வரும் சட்டமன்ற தேர்தலில் நானும், என் மனைவியும் போட்டியிட மாட்டோம்- சரத்குமார்

சென்னையில் இன்று அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டினார் சரத்குமார்.
Sarathkumar | வரும் சட்டமன்ற தேர்தலில் நானும், என் மனைவியும் போட்டியிட மாட்டோம்- சரத்குமார்
Published on

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, நடிகர் சரத்குமார் பா.ஜனவில் இணைந்தார். அந்த நேரத்தில் தான் நடத்தி வந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியையும் கலைத்தார். தொடர்ந்து பா.ஜ.க.வுக்காக தேர்தல் பணி ஆற்றினார். விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் ராதிகா சரத்குமார் களம் கண்டார். அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார்.

இதற்கிடையே, பா.ஜ.க.வில் இணைந்து 2 ஆண்டுகள் ஆகியும் சரத்குமாருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எந்தவொரு பதவியும் பா.ஜ.க.வில் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில், சட்டசபை தேர்தலும் நெருங்கி விட்டதால் சரத்குமார் தனது ஆதரவாளர்கள் சிலருக்கு போட்டியிட பா.ஜ.க. தலைமையிடம் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அதற்கு பா.ஜ.க. தலைமையிடம் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பா.ஜ.க. சரத்குமாரை புறக்கணிப்பதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டனர். பா.ஜ.க.வில் இருந்து விலகுங்கள் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே பா.ஜ.க. தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சரத்குமார் தனது ஆதரவாளர்களின் கருத்துக்களை கேட்கவும், அடுத்தக்கட்ட நகர்வு குறித்து விவாதிக்கவும் சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்.

சென்னை தியாகராயநகர் கீதம் ஹாலில் காலை 10 மணிக்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அரசியலில் தனது அடுத்தக்கட்ட நகர்வு குறித்து சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பாஜகவில் இணையும்போது கொடுத்த உத்தரவாதங்கள் என்னவென்று அவர்களுக்கு தெரியும். இப்போது வரை பொறுப்பு வழங்கப்படவில்லை.

உத்தரவாதம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது செயல்பாட்டுக்கு வரவில்லை.

வரும் சட்டமன்ற தேர்தலில் நானும், என் மனைவியும் போட்டியிட மாட்டோம்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மதிப்பீடு என்பதே கிடையாது, தவெக தலைவர் விஜய் தலைவரோ கிடையாது.

பொறுப்பு இருந்தால் தான் என்னாலும் செயல்பட முடியும், இதை வேதனையாக சொல்லவில்லை.. ஆதங்கமாக சொல்கிறேன்.

ஏன் நீங்கள் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கக்கூடாது என்று கூட எனத ஆதரவாளர்கள் கூறினார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com