முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க.அரசில் திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி?- தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு

நடந்து முடிந்த தேர்தலில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என திட்டமிட்டு இருந்த நிலையில் திடீரென அந்த முடிவை வாபஸ் பெற்றார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க.அரசில் திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி?- தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு
Published on

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளன.

காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம்பெறுகிறது. அதற்கான அழைப்பை முதலமைச்சர் விஜய் கொடுத்துள்ளார். அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென்று விரும்புகிறார். அதன் அடிப்படையில் அவருக்கு மறைமுகமாக அழைப்பு விடுக்கப்பட்டது.

புதிய அமைச்சரவையில் திருமாவளவன் இடம்பெற வேண்டும் என்றும் அவருக்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்க இருப்பதாகவும் விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மீண்டும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வெற்றி பெற்று சட்டசபைக்கு வர வேண்டும், தமிழக அமைச்சரவையில் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதற்காக தங்களது முடிவை பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் அழைப்பை திருமாவளவன் ஏற்றுக்கொள்வாரா? அல்லது வெளியில் இருந்து ஆதரவு என்ற முடிவில் உறுதியாக இருப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.

நடந்து முடிந்த தேர்தலில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என திட்டமிட்டு இருந்த நிலையில் திடீரென அந்த முடிவை வாபஸ் பெற்றார். அதன் பின்னர் அங்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த இளைய பெருமாள் மகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளார்.

திருமாவளவனை முதலமைச்சர் ஆக்க வேண்டும், துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றெல்லாம் கடந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் அந்த வாய்ப்பு நூல் இழையில் தவறியது. எனவே தற்போது கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கட்சியில் பெரும்பாலானவர்கள் கருத்தாக உள்ளது.

ஆனால் முதலமைச்சர் விஜய் கொடுத்துள்ள அமைச்சர் வாய்ப்பை திருமாவளவன் பயன்படுத்திக் கொள்வாரா? அல்லது தொடர்ந்து இதே நிலையில் நீடிப்பாரா? என்பது ஒரு சில நாட்களில் தெரியவரும். அமைச்சர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com