

அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது, ஒரு சகோதரி ஸ்தானத்தில் தான் பேசினார் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் அரசுப்பள்ளியில் கடந்த 2-ந்தேதி அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கல்விச் சூழல், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த ஆய்வின்போது மாணவி ஒருவரிடம் அவர் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியவிதம் மற்றும் அவர் ஆசிரியரிடம் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமைச்சர் கீர்த்தனாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளி ஆய்வு ஏற்படுத்திய சர்ச்சைக்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், அரசுப் பள்ளி மாணவியை கேலி செய்ததாக பொய்யான கதையைப் பரப்புகிறார்கள். நானே ஓர் அரசுப் பள்ளி மாணவி. தமிழ் வழிக்கல்வியில் படித்தேன்' என தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டதை தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.
* ஒரு சகோதரி ஸ்தானத்தில் தான் அமைச்சர் கீர்த்தனா பேசினார்.
* அமைச்சர் கீர்த்தனா தமிழ் வழி கல்வியில் படித்த சகோதரி தான். இன்று ஆங்கிலத்தில் நன்றாகப் பேசக்கூடிய தனித்திறமையை வளர்த்துக்கொண்டவர். அரசியல் ஆளுமை உடையவர். அங்கிருந்த மற்றவர்கள் எடுத்த காணொளி தான் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
* அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வது என்பது மரபு.
இவ்வாறு அவர் கூறினார்.