நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்! கழகத்தைக் கட்டிக் காப்போம்!- எடப்பாடி பழனிசாமி

கழகத் தொண்டர்களும் தற்போதைய சூழ்நிலையை எண்ணி எவ்வித அச்சத்திற்கும், பதற்றத்திற்கும் ஆளாக வேண்டாம்.
Edappadi Palaniswami
Published on

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்! கழகத்தைக் கட்டிக் காப்போம்!

எம்.ஜி.ஆர். அதிமுக-வை தொடங்கிய நாள் முதல் பல்வேறு சோதனைகளையும், துரோகங்களையும் சந்தித்து வெற்றி கண்டுள்ளார்.

தொடர்ந்து, அம்மா இதுபோன்ற பல்வேறு சோதனைகளையும், துரோகங்களையும் சந்தித்துதான் கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அம்மா 1988, 1989 ஆண்டுகளில் பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும் சந்தித்தார். குறிப்பாக 1996 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, கழகம் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று சோதனையைச் சந்தித்தபோது, கழகத்தில் உடன் இருந்தே அம்மாவுக்கு பல நேரங்களில் இழைக்கப்பட்ட துரோகங்களை துணிச்சலோடு எதிர்கொண்டு கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று, பல்வேறு சிறப்புகளைப் பெற்றுத் தந்தார்.

அந்த வகையில், நம் இரும்பெரும் தலைவர்களின் நல்லாசியோடும், உங்களின் ஒத்துழைப்போடும் ‘கழகப் பொதுச் செயலாளர்’ பொறுப்பினை ஏற்று, இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் நான், பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும், துரோகங்களையும், கழக நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி கழகத் தொண்டர்களின் துணையோடு எதிர்கொண்டு தொடர்ந்து பயணித்து வருகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகம் 47 இடங்களைப் பெற்ற நிலையில், கழகத்தில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கழகத்தை அழிப்பதற்கான செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நமக்கு எப்பொழுதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆன்மா உறுதுணையாக இருக்கும்.

கழகத்தின் தற்போதையை நிலையை எண்ணி, தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும், கழகத்தின் தீவிர விசுவாசியுமான மகேந்திரன் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அறிந்து என்னுடைய மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கிறது.

அதிமுக-வுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனையைக் கண்டு கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் மனம் தளர வேண்டாம். எவ்வித விபரீதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்கள் அனைவரையும் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்கள்தான், சட்டமன்றத் தேர்தலில் தொடர் வெற்றியை கண்டவர்கள். வெற்றி, தோல்வி என்பது மாறி, மாறி வரும். கழகம் தோல்வியை கண்டு துவண்டுவிடுவதுமில்லை. அந்தவகையில், கழகம் தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், இந்நிலையில் இருந்து விரைவிலேயே மீண்டு, எதிர்வரும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெறும்.

கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு கழக நிர்வாகிகளும், கோடானு கோடி கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்

என்ற இதய தெய்வம் அம்மாவின் எண்ணவோட்டத்தை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மெய்ப்பித்துக் காட்டுவோம்.

கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் தற்போதைய சூழ்நிலையை எண்ணி எவ்வித அச்சத்திற்கும், பதற்றத்திற்கும் ஆளாக வேண்டாம் என்று மீண்டும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

களப் பணி ஆற்றுவோம்! கழகம் காப்போம்!

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com