தமிழ்நாடு அரசின் பிரதிநிதி கர்நாடகாவை சேர்ந்தவரா? - கனிமொழி கண்டனம்

தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?
 Venkata Narayana - Kanimozhi
Published on

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்திற்கான நம்பிக்கைக்குரிய பாலமாக விளங்குபவர். டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆவார். இப்பதவிக்கு முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அல்லது சட்டம் பயின்றவர்களை தமிழக அரசு நியமிப்பது வழக்கம்.

மத்திய அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்திற்கான புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்ட அனுமதிகளை விரைவுபடுத்துவது இவர்களின் முக்கியப் பணியாகும். மேலும், மாநில அரசின் கோரிக்கைகள் மற்றும் முக்கியப் பிரச்சினைகளை மத்திய அரசின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்வர்.

வெங்கட நாராயணா

டெல்லியில் நடைபெறும் மத்திய அரசின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் தமிழக அரசு சார்பில் பங்கேற்பதுடன், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் டெல்லி செல்லும்போது தேவையான ஏற்பாடுகளையும் கவனிப்பார்கள்.

குறிப்பாக மாநில அரசின் நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதே அவரின் முக்கிய பணி.

அந்த வகையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜக்கையன், செல்வேந்திரன், தளவாய் சுந்தரம் போன்றவர்கள் பணியாற்றி உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் ஏ.கே.எஸ்.விஜயன் அந்த பதவியில் இருந்து வந்தார்.

அரசு உத்தரவு

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக சினிமா பட தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணாவை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி சிறப்பு பிரதிநிதியாக சினிமா தயாரிப்பாளரை தமிழக அரசு நியமித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கனிமொழி கண்டனம்

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இரண்டு கேள்விகள் தான் எழுகின்றன.

1. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?

2. மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com