

தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் 2026 தேர்தல் முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தனது முதல் தேர்தலிலேயே விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், 108 இடங்களை வாரி சுருட்டியது. ஆனால் ஆட்சி அமைக்க 118 இடங்கள் இல்லாததால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை நாடியது.
நீண்ட ஆலோசனைக்கு பின் நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளிப்பதற்கான கடிதத்தை விஜய்யிடம் நேற்று வழங்கியது.
தமிழக கவர்னர் அர்லேகரை சந்தித்து, விஜய் நேற்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கினார்.
ஆனால் அதை பெற்றுக்கொண்ட கவர்னர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால் தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் விஜய் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
1971ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்ற கழகத்தோடு ஒன்றாக இணைந்து பல தேர்தல்களை சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சி, தற்போது தமிழகத்தில் புதியதாக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உள்ள தமிழக வெற்றிக் கழகத்தோடு இணைந்துள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.
இதுதொடர்பாக திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி கூறுகையில், காங்கிரசின் துரோகத்தையும் மீறி, திமுக ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக செயல்பட முடிவெடுத்துள்ளது. தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்குமாறு பாஜகவை அதிமுக வலியுறுத்தி வருகிறது. இது மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாகும். ஜனநாயகம் வெல்லும் என்று நம்புவோம் என்று தெரிவித்துள்ளார்.