சட்டசபையில் முதலமைச்சர் விஜய் சைகை காட்டியது அவை மீறல் அல்ல- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

சட்டசபையில் முதலமைச்சர் விஜய் சைகை காண்பித்தது மரபு மீறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளனரே? என்று கேள்வி கேட்கப்பட்டது.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
Published on

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் நேற்று பேசியபோது கைகளை காட்டி சைகை செய்ததை தி.மு.க.வினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இது அவை மீறல் என்று கூறி வருகிறார்கள்.

இது தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். சட்டசபையில் முதலமைச்சர் விஜய் சைகை காண்பித்தது மரபு மீறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளனரே? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “நடந்தது எதுவும் அவை மீறியது அல்ல” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் அப்பாவு சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டப்பேரவை விதிப்படியும் மரபு படியும் பேரவையில் இல்லாத ஒருவரை பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சட்டமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ அல்லது உடல் மொழியாகவோ விமர்சனமோ அல்லது கிண்டலோ, கேலியோ செய்யக் கூடாது என்பது சட்டப் பேரவை தலைவருக்கு தெரிந்திருக்கும்.

இது தொடர்பாக கடந்த 22-ந்தேதி அன்று சட்டப் பேரவைத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர்கள் உடல் மொழியாக அல்லது வாய்மொழியாக யாரையும் கிண்டலும், கேலியும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்த அடுத்த நாளே இதே போல் வாய்மொழியாகவும், உடல் மொழியாகவும் அவையில் இல்லாதவர் (முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) குறித்து தமிழக முதலமைச்சர் கிண்டலும், கேலியும் செய்தது அவை உரிமை மீறல் இல்லையா? அவ்வாறான செயலில் ஈடுபட்ட முதலமைச்சர் மீது தாமாக முன்வந்து அவை உரிமை மீறல் நடவடிக்கையை பேரவைத் தலைவர் எடுப்பாரா? தானே முதலமைச்சருக்கு இதுபோல் செயல்பட அனுமதித்தது நியாயமா? பதிலை எதிர்பார்த்து தமிழ்நாடே காத்திருக்கிறது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com