நரிக்குறவ பெண்ணுக்கு இன்னும் லோன் கிடைக்கல... நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் சமூக நீதியா? அண்ணாமலை கேள்வி

முதல்வர் வழங்கிய கடனுதவி தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என நரிக்குறவ பெண் அஸ்வினி கூறியிருந்தார்.புகாரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.
நரிக்குறவ பெண்ணுக்கு இன்னும் லோன் கிடைக்கல... நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் சமூக நீதியா? அண்ணாமலை கேள்வி
Published on

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை தீபாவளியன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், கோவில் அன்னதானத்தின்போது அவமதிக்கப்பட்ட நரிக்குறவர் இனப் பெண் அஸ்வினிக்கும் கடனுதவி ஆணையை வழங்கினார்.

ஆனால், முதல்வர் வழங்கிய கடனுதவி தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என அஸ்வினி சமீபத்தில் புகார் கூறியிருந்தார். முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் லோன் யாருக்கும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் பேசிய வீடியோ பதிவை பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

"விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் இந்த திமுக அரசு, தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை தேர்தலுக்குப் பின் கொடுக்கும் வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறார்கள். இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்கள் சமூக நீதியா?' என அண்ணாமலை கூறி உள்ளார்.

நரிக்குறவ பெண் புகாரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். பூஞ்சேரியில் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.1.5 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 54 இலவச வீட்டுமனை பட்டாக்கள், 35 சாதி சான்றிதழ்கள், 6 முதியோர் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com