

தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகிய நிலையில், தனக்கு வழங்கப்பட்டுள்ள இசட் பிரிவு பாதுகாப்பை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாஜகவின் மாநிலத்தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற நிலையில், மத்திய அரசு அவருக்கு இந்த பாதுகாப்பை வழங்கியது. தற்போது கட்சியில் இருந்து விலகிய நிலையில் இக்கடிதத்தை எழுதியுள்ளார். உள்துறை அமைச்சகம் இந்த கடித த்தை ஏற்கும்பட்சத்தில் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும்.
பாஜகவில் இருந்து விலகிய சில மணி நேரங்களிலேயே, இளைஞர்களை மையமாகக் கொண்ட ‘We The Leaders’ என்ற புதிய அரசியல் இயக்கத்தை அண்ணாமலை தொடங்கியுள்ளார்.
இந்த இயக்கம் முதற்கட்டமாக ஒரு தன்னார்வ அமைப்பாகச் செயல்படும் என்றும், விரைவில் இது முழுமையான பிராந்திய அரசியல் கட்சியாக மாற்றப்பட்டு தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தல்களில் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த இயக்கத்தில் தற்போதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.