கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது தடை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு

ஐகோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து ஐகோர்ட்டில் கே.என்.நேரு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
சென்னை ஐகோர்ட்
Published on

திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2 ஆயிரத்து 538 உதவி என்ஜினீயர்கள் மற்றும் இளநிலை என்ஜினீயர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி, அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாததால், லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குநர் மீது அ.தி.மு.க., எம்.பி., இன்பதுரை கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். அதேபோல, வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மனு தாக்கல் செய்தார்.

இந்தநிலையில், ஐகோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து ஐகோர்ட்டில் கே.என்.நேரு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, ஜூன் 23 -ந்தேதி (இன்று) வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேருவின் சகோதரர் உள்ளிட்டோர் தரப்பிலும், வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி கடந்த ஆட்சியின் போது தமிழ்நாடு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கே.என்.நேரு உள்ளிட்டோர் தரப்பில், ‘‘ஆட்சி மாறினாலும், முந்தைய அரசு எடுத்த நிலைபாட்டுக்கு மாறாக தற்போதைய அரசு எடுத்துள்ள நிலைபாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. பிரதான வழக்கில் எங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்’’ என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, நேரு உள்ளிட்டோரின் மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையையும், முந்தைய தி.மு.க., அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை வாபஸ் பெற அனுமதி கோரி தற்போதைய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையையும் நீதிபதிகள், வருகிற ஜூலை 10-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர். அதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்று ஏற்கனவே விதித்த தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com