நீட் தேர்வு முறைகேட்டை தடுக்க பலத்த பாதுகாப்பு - சென்னையில் 43 இடங்களில் ஏற்பாடுகள்

தமிழகத்தில் நீட் மறு தேர்வு 31 மாவட்டங்களில் 307 மையங்களில் நாளை நடைபெறுகிறது.
NEET Exam
Published on

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மே மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 22 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வு எழுதினார்கள்.

தேர்வு எழுதுவதற்கு முன்பே வினாத்தாள் கசிந்து பெரும் சர்ச்சையானது. வட மாநிலத்தில் நடந்த இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி சிலரை கைது செய்துள்ளனர்.

நீட் தேர்வில் முறைகேடு நடந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கிடையே வினாத்தாள் எவ்வாறு கசிந்தது என்று தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

மன அழுத்தம்

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் சிரமத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளானார்கள். மீண்டும் தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டது. நீட் மருத்துவ தேர்வு எவ்வித குழப்பமும் இல்லாமல் முறைகேடுக்கு சிறிதும் இடம் கொடுக்காமல் நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமை அனைத்து முன் ஏற்பாடுகளையும் கடந்த சில நாட்களாக செய்து வருகிறது.

வினாத்தாள் தயாரிப்பதில் இருந்து அதனை ஒவ்வொரு மையங்களுக்கும் பாதுகாப்பாக கொண்டு செல்வது முதல் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள் கசிவிற்கு காரணமாக இருந்த டெலிகிராம் செயலியை நாடு முழுவதும் தடை செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நீட் மருத்துவ தேர்வு இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தேர்வு மையங்கள் மற்றும் வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் நீண்ட பாதுகாப்புடன் போலீசாரின் தீவிர மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

307 மையங்கள்

அனைத்து மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நீட் தேர்வு குழப்பமில்லாமல் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போலீசாருடன் வருவாய்த்துறை, பள்ளிக் கல்வித்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் இணைந்து செயல்படுகின்றன.

தமிழகத்தில் நீட் மறு தேர்வு 31 மாவட்டங்களில் 307 மையங்களில் நாளை நடைபெறுகிறது. ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 489 பேர் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் இத்தேர்வை எவ்வித குளறுபடியும் இல்லாமல் முறையாக நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை இயக்குனர் அபிஷேக் தெரிவித்துள்ளார்.

அதன்படி சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர், ஊட்டி, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், விருதுநகர், வேலூர் உள்ளிட்ட 31 மாவட்டங்களில் மறுதேர்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீட் மருத்துவ முறைகேடு இல்லாமல் நடத்துவதற்கு தடுப்பு ஒத்திகை இன்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. போலீஸ் படைகள், பாதுகாப்பு குழுவினர்களுடன் ஒருங்கிணைந்து இந்த தடுப்பு ஒத்திகை நடத்தினர்.

நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை நடைபெறுகிறது.

மாணவ -மாணவிகள் பதட்டமில்லாமல் தேர்வு எழுத வேண்டும். தேர்வு மையங்களுக்கு தாமதமாக செல்லாமல் தங்களது இருப்பிட பகுதியில் இருந்து எவ்வளவு தூரம் மையம் இருக்கிறது என்பதை கணக்கிட்டு அதற்கேற்றவாறு பயணத்தை திட்டமிடவும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது.

வழிகாட்டி நெறிமுறைகள்

தேசியத் தேர்வு முகமை வழங்கியுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி தேர்வர்கள் மையங்களுக்கு வரவேண்டும். எலக்ட்ரானிக் சாதனங்கள், ஆடைக்கட்டுப்பாடுகள், அணிகலன்கள் போன்றவை கண்டிப்பாக பின்பற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வு மையத்திற்கு காலை 11 மணி முதல் அனுமதிக்கப்படுவார்கள். பகல் 1.30 மணி வரை மையத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதன்பிறகு கேட் மூடப்படும். யாரும் உள்ளே வர முடியாது. எனவே 11 மணி முதல் 1.30 மணி வரை சுமார் 2.30 மணி நேரம் கால அவகாசம் உள்ளது. அதற்குள்ளாக தேர்வர்கள் மையங்களுக்குள் வந்து சேர்ந்து விட வேண்டும்.

சென்னையில் 43 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. செங்கல்பட்டு-7, காஞ்சிபுரம்-5, திருவள்ளுவர்-8 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இது தவிர காரைக்காலில் 3 மையங்களிலும் புதுச்சேரியில் 6 மையங்களிலும் நீட் மருத்துவ தேர்வு நடக்கிறது.

அனைத்து தேர்வு மையங்களுக்கும் இன்று முதல் போலீஸ் பாதுகாப்பு கடுமையாக போடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் வெளி நபர்கள் யாரும் பிரவேசிக்க அனுமதி இல்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com