

தொப்பம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள பாலசமுத்திரம், யானைப்பாறை, செம்மாட்டுப்பாறை, அய்யம்புளி, ராமர்பாதம் உள்ளிட்ட பகுதிகளில் 400 ஏக்கருக்கு மேல் நெற்பயிர் விவசாயம் நடைபெற்று வருகிறது.
பாலாறு பொருந்தலாறு அணையை ஒட்டியுள்ள இந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இன்றும் நாளையும் அறுவடை செய்யலாம் என்று விவசாயிகள் அதற்கான பணிகளை தயார் நிலையில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து வீணானது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி நெற்பயிர்களை பாதுகாத்து வந்த நிலையில் தற்போது அறுவடை நேரத்தில் பெய்த மழை தங்கள் வாழ்வாதாரத்தை பாழாக்கி விட்டதாக கண்ணீர் வடித்தனர்.
எனவே வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்டு தங்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருவம் தவறி பெய்த மழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகளை வேதனை அடைய வைத்துள்ளது.