என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை- சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை- சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

    • பாலியல் தொல்லைகளுக்கான தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
    • ஜனாதிபதி மாளிகைக்கும் தமிழக சட்டத்துறைக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டது.

    சென்னை:

    பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்து தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 சட்ட மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தார்.

    அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:-

    பெண்ணை வன்புணர்ச்சி செய்யும் கற்பழிப்பு குற்றத்திற்கு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவை, 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. நம்பிய நெருங்கிய உறவினராலோ பெண் வன்புணர்ச்சி செய்யப்பட்டால், அந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவை, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது. 66-ம் பிரிவில், பெண்ணுக்கு வன்புணர்ச்சி மற்றும் மரணம் அல்லது நிரந்தர ஊனத்தை ஏற்படுத்திய குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது.

    பெண்ணை கூட்டு வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது.

    18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டு வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை உயர்த்தப்படுகிறது.

    சில குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்திய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கத்தில் தாக்கும் குற்றத்திற்கு 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையான தண்டனையின் அளவு, 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. பாலியல் தொல்லைகளுக்கான தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. பெண்ணின் ஆடையை அகற்றும் நோக்கத்தில் தாக்கும் குற்றத்திற்காக 3 முதல் 7 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் அளவு, 5 முதல் 10 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது.

    மறைந்திருந்து காணும் பாலியல் கிளர்ச்சி என்ற குற்றத்திற்காக 1 முதல் 3 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் அளவு, 2 முதல் 5 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. மீண்டும் அதை செய்தால், அந்த குற்றத்திற்காக 3 முதல் 7 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் அளவு, 5 முதல் 10 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது.

    பெண்ணை பின்தொடரும் குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் அளவு, 5 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. மீண்டும் அதை செய்தால், அந்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் அளவு, 7 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது.

    அமிலம் என்ற ஆசிட் வீசி பெண்களுக்கு கொடுங்காயங்களை ஏற்படுத்தினால், 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை நீட்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆசிட் வீச முயன்றால், 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையான தண்டனையின் அளவு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமின் கோரினால், அவர் அப்படிப்பட்ட குற்றவாளி அல்ல என்பதும், எந்த குற்றத்தையும் அவர் செய்ய வாய்ப்பில்லை என்பதற்கான திருப்தியான காரணங்கள் தெரியும்வரை ஜாமின் அளிக்கக் கூடாது.

    இவ்வாறு அந்த சட்ட திருத்தத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த சட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்த சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    இது உடனடியாக ஜனாதிபதி மாளிகைக்கும் தமிழக சட்டத்துறைக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் உடனே அதை நடைமுறைப்படுத்தும் வகையில் தமிழக அரசிதழிலில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×