

சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடு வெளியான நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பங்கேற்கவில்லை.
அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலை போல 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கேட்டு இருந்த நிலையில் அதைவிட குறைவான தொகுதிகளையே ஒதுக்க முடியும் என்று அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்தே ஜி.கே.வாசன் அதிருப்தி காரணமாக தொகுதி பங்கீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகி விட்டதாக அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் த.மா.கா.வின் எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
நேற்று இரவு நான் சென்னையில், மத்திய மந்திரியும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை சந்தித்தேன்.
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் த.மா.கா.வின் எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் ஜி.கே.வாசனுக்கு 4 தொகுதிகள் வரையில் ஒதுக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதிக்கட்சி, என்.ஆர். தனபாலன் தலைமையிலான பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் புரட்சி பாரதம், ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக முன்னேற்ற கழகம், பாரி வேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுக்கும் இன்னும் ஓரிரு நாளில் தொகுதி உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியில் உள்ள இது போன்ற சிறிய கட்சிகளுக்கு ஒன்று அல்லது 2 இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.