கூண்டோடு நீக்கிய இபிஎஸ்... அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த சி.வி.சண்முகம்!

கடைசி நேரத்தில் தவெகவும் கூட்டணிக்கு தயாராக இருந்ததாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
கூண்டோடு நீக்கிய இபிஎஸ்... அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த சி.வி.சண்முகம்!
Published on

தவெகவிற்கு ஆதரவளித்த முக்கிய நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இந்த நீக்கத்தைத் தொடர்ந்து சிவி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சிவி. சண்முகம்,

“தோல்வியை அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் சந்தித்துள்ளன. அதிமுகவும் பலமுறை தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் அந்த இயக்கத்தை மீண்டும் கொண்டுவர தகுதியும், திறமையும், ஜெயலலிதாவிடம் இருந்தது. 1996-ல் மிகமோசமான தோல்வியை தழுவியது அதிமுக. தோல்விக்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, மீண்டும் வெற்றிப்பெற வைத்தார் ஜெயலலிதா.

வெற்றியை மட்டுமல்ல, தோல்வியையும் ஏற்றுக்கொள்பவர்தான் தலைவர். தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கைக்காட்டுபவர் தலைவர் அல்ல. வெற்றிப்பெற்றால் தன்னால் வெற்றி, தோல்வி அடைந்தால், நிர்வாகிகளை கைக்காட்டுவது. ஜெயலலிதா கௌரவம் பார்க்காதவர்.

வீடுதேடி வந்தவர்களை, அரை சதவீதம், ஒரு சதவீதம் எனக்கூறி, நான் 210 தொகுதிகளில் வெற்றிப்பெறுவேன் எனக்கூறி ஒரு ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு வந்த தலைவர்களை எல்லாம், விரட்டியத்த தலைமையை இன்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

கடைசி நேரத்தில்கூட தவெக கூட்டணி அமைக்க தயாராக இருந்தது. அவர்களுடன் கூட்டணி வைத்தால் மிகப்பெரிய வெற்றிப்பெறலாம் எனக்கூறினோம். எங்களை எல்லாம் எடுத்தெறித்து பேசி எனக்குத் தெரியும் எனக்கூறினார்.

2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் எனக்கூறினோம். வேண்டாம் என்றுக் கூறினார். தேர்தலின் முடிவு படுதோல்வி. ஆனால் சட்டமன்ற தேர்தலில் திடீரென்று அமித்ஷா வீட்டிற்கு செல்கிறோம் எனக்கூறி தன்னிச்சையாக கூட்டணியை அறிவிக்கிறார். யாரை கேட்டார்? யாரோடும் கலந்தோசிக்கவில்லை. இன்றுவரை கூட்டணிக்கான காரணத்தை சொல்லவில்லை.

தேமுதிகவை இணைக்கக்கூறினோம். தேமுதிகவுக்கு வாக்கு கொடுத்தப்படி எம்பி சீட் கொடுக்க சொன்னோம். எங்களுடைய கருத்தை உதாசீனப்படுத்தி விட்டார். அப்போதும் கூட்டணியில் சேரவந்தார்கள். ஆனால் அவர்களை சேர்க்கவில்லை.

அதிமுகவுக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என நாங்கள் தான் சொன்னோம். அவரை பொதுச்செயலாளராக அறிவித்தோம். நாங்கள் எடுத்த முடிவுக்காக அனுபவிக்கிறோம். பொதுச்செயலாளராக கடந்த 4 ஆண்டுகளில் அவர் செய்த ஒரேபணி நீக்குவது, நீக்குவது, நீக்குவது.

ஒன்று சிறைவாசம் இல்லை என்றால் வனவாசம். கேள்வி கேட்டால் கட்சியில் இருந்து நீக்கிவிடுகிறார். அவர் நீக்கிய அனைவரும் இன்று சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com