EPS Speech | திரைப்படம் பாருங்கள், ரசியுங்கள்... அதை நம்பி ஓட்டுப் போட்டால் அந்த ஓட்டு வீணாகும் - எடப்பாடி பழனிசாமி

இளைஞரின் சிந்தனைகள் நாட்டின் வளர்ச்சி பற்றி இருக்க வேண்டும்.
EPS Speech | திரைப்படம் பாருங்கள், ரசியுங்கள்... அதை நம்பி ஓட்டுப் போட்டால் அந்த ஓட்டு வீணாகும் - எடப்பாடி பழனிசாமி
Published on

தமிழ்நாட்டில் வருகிற 23-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், "திரைப்படம் பாருங்கள், ரசியுங்கள். அதோடு விட்டுவிடுங்கள். கனவு காண்கிறோம், கண் விழித்தால் கனவு காணாமல் போயிடும், அதுபோல்தான் திரையுலகம். அதை நம்பி ஓட்டுப் போட்டால் அந்த ஓட்டுதான் வீணாகும். ஒரு ஆள் 50 பேரை அடிப்பார், நிஜத்தில் முடியுமா? துப்பாக்கியால் சுடுவார்கள், இவர் மீது குண்டே பாயாது, ஆனால் இவர் சுடும் குண்டு எல்லோருக்கும் பாயும். அதை நம்பாதீர்கள்.

நீங்கள் நாட்டை ஆளக்கூடிய சிங்கக் குட்டிகள். இளைஞரின் சிந்தனைகள் நாட்டின் வளர்ச்சி பற்றி இருக்க வேண்டும். நாங்கள் வாழ்ந்து முடித்தவர்கள், நீங்கள் வாழப்போகிறவர்கள். ஒவ்வொரு இளைஞரும் சிந்திக்க வேண்டும். நீங்கள் போடும் ஓட்டால் தமிழகம் வளம் கொழிக்கும் நாடாக மாறவேண்டும்.

ஒரு பிரச்னை வந்தது, 72 நாட்கள் ஆளைக் காணோம். நானெல்லாம் போராட்டம் செய்து 7 முறை சிறை சென்றேன். 51 ஆண்டு கால அரசியலில் 10 தேர்தல்களை சந்தித்தேன், சேவலில் ஜெயித்தேன், கட்சிக்காக உழைக்கிறேன், எவ்வளவு பிரச்னை வந்தாலும் கட்சியைக் காப்பதுதான் தலைவருடைய கடமை. உண்மையைத்தான் பேசுகிறேன். உங்கள் வாக்கு சாதாரணமானது அல்ல. மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றால் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள், நாடு காப்பற்றப்படும்.

எம்.ஜி.ஆர். நடிகர் தான், இவரும் நடிகர் தானே என்று பத்திரிகையில் பேட்டி கேட்டனர், எம்.ஜி.ஆரயும் இவரையும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். எம்.ஜி.ஆர். தெய்வம், நடிக்கும்போதே தன் பணத்தை மக்களுக்காகச் செலவழித்தார், தான் இறந்த பின்னரும் தன் சொத்தை காது கேளாதோருக்குக் கொடுத்த தலைவர். உயிர் நீத்த பின்னரும் நன்மை செய்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். நிறைய பேசலாம் வேண்டாம்.

புதியவர் வரட்டும் பார்க்கலாம். அ.தி.மு.க.வை பொறுத்தவரை அனைவரும் அரசியலுக்கு வரலாம், ஆனால் வந்த பின் தங்களை நம்பி இருப்பவர்களைக் கைவிடக் கூடாது," என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com