

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்து, 2029 நாடாளுமன்றத் தேர்தலை புதிய தொகுதி அமைப்பின்படி நடத்த மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளது.
உயர்த்தப்படவுள்ள 816 தொகுதிகளில் 273 தொகுதிகளை (33%) பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான சட்டத்திருத்த மசோதாக்களைத் தாக்கல் செய்ய ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு கூட்டப்பட உள்ளது. இதற்காக பா.ஜ.க. தனது எம்.பி-க்களுக்கு கட்டாய வருகைக்கான கொறடா உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனிடையே இந்த தொகுதி மறுவரையறையால்,மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்றும், இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை,
“மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்திருந்தால் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 தொகுதிகளில் இருந்து 31 தொகுதிகளாக குறைந்திருக்கும். 8 எம்.பி.க்களை இழந்திருப்போம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிகளை 50% உயர்த்த உள்ளதாக முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் நம்முடைய தலைவர்கள் தெரிவிப்பார்கள்.
அப்படி இருக்கையில் தமிழ்நாட்டின் எம்.பி.க்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 வரை உயர வாய்ப்பு இருக்கிறது. கேரள மாநிலத்தில் 20-லிருந்து 30 வரை செல்வதற்கு வாய்ப்புள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யாமல், அனைவரையும் ஒரு மனதோடு, ஒரு நேர்க்கோட்டுப் பாதையில் மத்திய அரசு எடுத்துச் செல்ல நினைக்கிறது.
எதற்காக பொய்யைக் கூறி அச்சத்தையும், பயத்தையும் முதலமைச்சர் உருவாக்குகிறார்?” என கேள்வி எழுப்பினார்.