

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலை 9.20 மணிக்கே சட்டசபைக்குள் வருகை தந்தனர்.
உதயநிதியுடன் வருகை தந்து இருந்த கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ‘வாயை திறங்க சி.எம். என்ற வாசகம் பொறிக்கப்பட்டு இருந்த கருப்பு பேட்ஜை தங்களது சட்டையில் அணிந்து இருந்தனர். இதன் பிறகு சட்டமன்ற வளாகத்தில் த.வெ.க. அரசுக்கு எதிராக கண்டன பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘கதறல் கேட்குதா சி.எம்.., திரையில் நாயகன்... தரையில் வில்லன்... ரீல்ஸ் இங்கே... ரியல் எங்கே... தூய சக்தி அல்ல... துயர சக்தி... தற்குறி ஆட்சி... தமிழ்நாடே சாட்சி... சிறு பெண்கள் இங்கே... சிங்கப் பெண்கள் எங்கே...’ என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கையில் ஏந்தி முழக்கம் எழுப்பியதால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டு விட்டு சென்ற நிலையில் 9.30 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்கு வருகை தந்தனர்.