

முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்று சட்டசபையில், சட்டமன்றப் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் பேரவை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட எம். ரவிசங்கர் ஆகியோரை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
"மக்களே, மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி" என்றார் அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் ஆப்ரகாம் லிங்கன். இன்றைக்கு அமைந்துள்ள மக்களாட்சி மலர்வதற்கு மக்களிடம் உள்ள பெரும் எதிர்பார்ப்பு. அவர்களுடைய எதிர்பார்ப்புகளை இப்பேரவையின் கவனத்திற்குக் கொண்டு வந்து அதனைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை. சட்டங்களை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு இப்பேரவைக்கு உள்ளது.
தாங்கள் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். மனதாக ஒரு தங்களை இந்த ஆசனத்தில் மாண்புமிகு பேரவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் தங்களுடைய கரங்களைப் பிடித்து அழைத்துக் சென்று அமர வைத்தார்கள்.
இந்தச் சம்பிரதாயம் எப்படி வந்தது என்று சொன்னால் சுவாரசியமாக இருக்கும். பெரிய வரலாறே இச்சம்பவத்தில் உள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள பாராளுமன்றம் நடைமுறைகளைப் போன்றதே நம்முடைய பாராளுமன்ற நடைமுறைகளும், மன்னர் ஆட்சி இருந்த காலத்திலேயே அங்கே பாராளுமன்றம் இயங்கியுள்ளது.
அக்காலத்தில் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மன்னரும் இருந்தார், பாராளுமன்றமும் இயங்கியது. அங்கே மன்னர் ஒரு பணியைச் செய்ய வேண்டுமென்று விரும்புவார். பாராளுமன்றம் அவருடைய விருப்பத்தை பெரும்பாலும் நிராகரிக்கும். மன்னர் விரும்பிய காரியத்தை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது என்கிற செய்தியை, மன்னருக்கு சொல்ல வேண்டியவர் பாராளுமன்ற தலைவர் 'Speaker' என்பார்கள்.
பாராளுமன்ற கருத்தை மன்னரிடம் சொல்ல வேண்டியவர் Speaker. அதற்கு துணிவு வேண்டும். சில பணிகளைச் செய்வதற்குதான் பாராளுமன்றத்தின் அனுமதி பெற வேண்டுமே தவிர, அந்த ராஜ்யத்தில் உள்ள எந்தப் பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு. தான் விரும்பியதை பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது என்று சொல்லும் Speaker-க்கு மரண தண்டனை விதிக்கும்படி ஆணையிடுவார். தலையை வெட்டி விடுங்கள் என்று ஆணையிடுவார்கள். இது பலமுறை நடந்ததால் யாருமே இந்த 'Speaker' பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள்.
எனவே, புதிதாக பாராளுமன்றம் அமையும்போது 'Speaker' பதவிக்கு ஒரு அறிவிக்கப்பட்டவுடன் அவர் உடனே தலை தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார். அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் அவரை தடுத்து நிறுத்தி, அவர் கைகளைப் பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள். இதுதான் அந்தக் காலத்தில் இருந்து வந்த மரபு. ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகும், இம்மரபு தொடர்கிறது.
நிச்சயமாக தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவருமே உங்களுக்கு உதவிகரமாகவே இருப்பார்கள் என்கிற வாக்குறுதியை இந்நேரத்தில் அளிக்க விரும்புகிறேன்.
பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும் பேரவை உறுப்பினர்களின் கண்ணியத்தையும் காக்க வேண்டிய பொறுப்பை உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.